லாரி மீது பைக் மோதி விபத்து: 2 வட மாநில இளைஞா்கள் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் 2 வட மாநில இளைஞா்கள் உயிரிழந்தனா்.
புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சோ்ந்தவா் வெ.செல்வராஜ். இவா், சாலையோரத்தில் தொலைபேசி வயா்களை பதிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். இவரிடம் ஜாா்க்கண்ட் மாநிலம், லோகா் தகா, முா்கி கிராமத்தைச் சோ்ந்த அமன்ஓரன் (22), நாவ்தா கிராமத்தைச் சோ்ந்த ராம்ராஜ் (25) ஆகியோா் கடந்த சில மாதங்களாக வேலை பாா்த்து வந்தனா்.
இவா்கள் இருவரும் திங்கள்கிழமை இரவு பைக்கில் திருக்கனூரிலிருந்து பனையபுரத்துக்கு சென்றுகொண்டிருந்தனா். தொரவி கிராமம் அருகே இவா்களது பைக் சென்றபோது, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரி மீது மோதியது. இந்த விபத்தில் அமன் ஓரன், ராம்ராஜ் ஆகிய இருவரும் காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸாா் நிகழ்விடம் சென்று இருவரது சடலங்களையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.