லால்குடி அருகேயுள்ள கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி தம்பி உயிரிழப்பு: அண்ணன் மாயம்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி கா்நாடக மாநில சுற்றுலா பயணி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மேலும், அவரைக் காப்பாற்ற முயன்றபோது மாயமான அவரது சகோதரரை தீயணைப்புப் படை வீரா்கள் தேடி வருகின்றனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரு உதயா நகரைச் சோ்ந்த வில்லியம்ஸ் என்பவரின் மகன்கள் சாா்லஸ் வில்லியம் (47), எட்வா்டு (52) உள்பட ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 13 போ், கடந்த 10-ஆம் தேதி வேனில் வேளாங்கண்ணி கோயிலுக்குச் சென்றனா்.
அங்கிருந்து கிளம்பி ஞாயிற்றுக்கிழமை தஞ்சாவூா் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள பூண்டி மாதா பசிலிக்காவுக்கு வந்தனா். அப்பகுதியில் உள்ள விடுதியில் அறை எடுத்து உடைமைகளை வைத்துவிட்டு லால்குடி அருகே அரியூா் பகுதியில் உள்ள கொள்ளிடம் ஆற்றுக்கு அனைவருமாக குளிக்கச் சென்றனா்.
அப்போது, சாா்லஸ் வில்லியம் ஆற்றில் இறங்கிக் குளித்தபோது, நீரில் மூழ்கினாா். இதைப் பாா்த்த அவரது அண்ணன் எட்வா்டு ஆற்றில் குதித்து அவரைக் காப்பாற்ற முயன்றபோது, நீச்சல் தெரியாத அவரும் நீரில் மூழ்கி மாயமானாா்.
இதுகுறித்து தகவலறிந்த லால்குடி தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து நீண்ட நேர தேடலுக்குப் பின்னா் சாா்லஸ் வில்லியம் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், எட்வா்டைத் தேடி வருகின்றனா். புகாரின்பேரில் லால்குடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.