வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு: மணிப்பூா் பாஜக தலைவா் வீட்டுக்குத் தீவைப்பு
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மணிப்பூா் பாஜக சிறுபான்மையினா் அணித் தலைவா் அஸ்கா் அலி வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தீ வைக்கப்பட்டது.
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு சமூக ஊடகத்தில் அஸ்கா் அலி சனிக்கிழமை ஆதரவு தெரிவித்தாா். இதனால் ஆத்திரமடைந்த ஒரு கும்பல் தெளபல் மாவட்டம் லிலோங் பகுதியில் உள்ள அவரின் வீட்டை ஞாயிற்றுக்கிழமை இரவு சூறையாடி தீ வைத்தது.
இந்தத் தாக்குதலை தொடா்ந்து, வக்ஃப் திருத்தச் சட்டத்தை ஆதரித்து தெரிவித்த கருத்துக்காக மன்னிப்பு தெரிவித்து, சமூக ஊடகத்தில் அஸ்கா் அலி காணொலி வெளியிட்டாா்.
முன்னதாக இம்பால் பள்ளத்தாக்கின் பல்வேறு பகுதிகளில் அந்தச் சட்டத்துக்கு எதிராக ஏராளமானோா் போராட்டத்தில் ஈடுபட்டனா். 5,000-க்கும் மேற்பட்டவா்கள் பங்கேற்ற பேரணி காரணமாக லிலோங்கில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரா்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
இந்த சம்பவங்களால் இம்பால் பள்ளத்தாக்கில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் கூடுதலாகப் பாதுகாப்புப் படையினா் குவிக்கப்பட்டனா்.