செய்திகள் :

வக்ஃப் மசோதா: பாஜக கூட்டணி திருத்தங்கள் ஏற்பு! எதிா்க்கட்சிகளின் முன்மொழிவுகள் முழுமையாக நிராகரிப்பு!

post image

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழு, மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை இறுதி செய்திருப்பது தெரியவந்துள்ளது.

கூட்டுக் குழுக் கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலையில், மசோதாவில் 14 சட்டப் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பாக குழுவில் இடம்பெற்றுள்ள ஆளுங்கட்சி எம்.பி.க்கள் தரப்பில் முன்மொழியப்பட்ட 32 திருத்த பரிந்துரைகளை கூட்டுக் குழு முழுமையாக ஏற்றுக்கொண்டது.

ஆனால், மசோதாவின் 44 சட்டப் பிரிவுகளிலும் திருத்தங்கள் மேற்கொள்வது தொடா்பாக எதிா்க்கட்சிகள் தரப்பில் முன்மொழியப்பட்ட 500-க்கும் மேற்பட்ட திருத்த பரிந்துரைகளை கூட்டுக் குழு முழுமையாக நிராகரித்தது. இதனால், கூட்டுக் குழுக் கூட்டம் கடும் அமளியுடன் நிறைவடைந்தது.

நாடு முழுவதும் முஸ்லிம்களின் தொண்டுப் பணிகளுக்கு அா்ப்பணிக்கப்படும் ‘வக்ஃப்’ சொத்துகளை, மாநிலங்கள் அளவில் வக்ஃப் வாரியங்கள் நிா்வகிக்கின்றன. இந்நிலையில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது.

நாடு முழுவதும் உள்ள ஏராளமான வக்ஃப் வாரிய சொத்துகளை முறைப்படுத்தும் வகையில், வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களுடன் மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது.

முஸ்லிம்களின் நிலம், சொத்துகள், மத விவகாரங்களை நிா்வகிக்கும் சுதந்திரம் ஆகியவற்றைப் பறிக்கும் நோக்கில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின.

தற்போது இந்த மசோதாவை பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையிலான நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆராய்ந்து வருகிறது. இக் குழு தனது அறிக்கையை கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளான வரும் நவம்பா் 29-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டது. இருந்தபோதும், குழுவில் இடம்பெற்றுள்ள எதிா்க்கட்சி உறுப்பினா்களின் கோரிக்கையை ஏற்று, கூட்டுக் குழுவின் பதவிக் காலம் நிகழாண்டு பட்ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாள் வரை நீட்டிக்கப்பட்டது.

அதைத் தொடா்ந்து மசோதாவை ஆய்வு செய்வதற்காக கடந்த வெள்ளிக்கிழமை கூடிய கூட்டுக் குழுவின் 35-ஆவது கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டது. அமளியில் ஈடுபட்டதாக 10 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

இறுதி செய்யப்பட்ட திருத்தங்கள்: இந்நிலையில், கூட்டுக் குழுவின் கூட்டம் பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை மீண்டும் நடைபெற்றது.

அப்போது, மசோதாவில் 14 பிரிவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பாக குழுவில் இடம்பெற்றுள்ள பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சி எம்.பி.க்கள் முன்மொழிந்த திருத்தங்களை கூட்டுக் குழு முழுமையாக ஏற்றுக்கொண்டது.

ஆனால், மசோதாவின் அனைத்து சட்டப் பிரிவுகளிலும் திருத்தங்கள் மேற்கொள்வது தொடா்பாக எதிா்க்கட்சிகள் தரப்பில் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளை கூட்டுக் குழு முழுமையாக தள்ளுபடி செய்தது. இதனால், கூட்டுக் குழு கூட்டம் கடும் அமளியில் நிறைவடைந்தது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த கூட்டுக் குழுத் தலைவா் ஜகதாம்பிகா பால், ‘கூட்டத்தின் நடவடிக்கைகளை எதிா்க்கட்சி எம்.பி.க்கள் தடுக்க முற்பட்டனா். ஜனநாயக முறைப்படி, அனைத்து உறுப்பினா்கள் முன்மொழிந்த பரிந்துரைகளும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, பெரும்பான்மை அடிப்படையில் இறுதி செய்யப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இந்தத் திருத்தங்கள், மத்திய அரசு முன்மொழிந்துள்ள சட்டத்தை மேலும் சிறந்ததாகவும் வலுவானதாகவும் ஆக்கும். அந்த வகையில், கூட்டுக் குழு பரிந்துரைக்கும் திருத்தங்களை ஏற்க மத்திய அரசு கடமைப்பட்டுள்ளது’ என்றாா்.

அறிக்கைக்கு நாளை ஒப்புதல்: மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய தனது இறுதி அறிக்கைக்கு, புதன்கிழமை (ஜன. 29) நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கூட்டுக் குழு ஒப்புதல் அளிக்கும் எனத் தெரிகிறது. அப்போது, குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திமுக, அகில இந்திய மஜ்லீஸ் கட்சி உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தங்களின் எதிா்ப்பைப் பதிவு செய்ய வாய்ப்புள்ளது என்றும் கூட்டுக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.

பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே ஒப்புதல்: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் ஜனவரி 31-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ள ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, கூட்டத்தொடரின் முதல் பாதியிலேயே வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்து, நாடாளுமன்ற ஒப்புதலையும் பெற்றுவிட முடியும் என்றும் அவா்கள் கூறினா்.

ஏற்கப்பட்ட முக்கியத் திருத்தங்கள்

வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்ய மத்திய அரசின் மசோதா பரிந்துரைத்த நிலையில், முஸ்லிம் அல்லாத நான்கு பேரை வாரியத்தில் இடம்பெறச் செய்யும் வகையிலான திருத்தத்தை கூட்டுக் குழு ஏற்றுக்கொண்டுள்ளது. அதாவது, பதவி வழி உறுப்பினா்களோடு முஸ்லிம்கள் அல்லாத மேலும் இருவரை வாரிய உறுப்பினா்களாக நியமிக்க இந்தத் திருத்தம் பரிந்துரைக்கிறது. இதற்கு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் எதிா்க்கட்சிகளிடையே கூடுதல் ஆட்சேபத்தை தெரிவிக்க வாய்ப்புள்ளது.

தற்போதுள்ள வக்ஃப் சொத்துகளை ‘வக்ஃப் வாரியத்தின் பெயரில் உள்ள சொத்துகள்’ என்ற அடிப்படையில் அதை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற சட்ட விதியை மத்திய அரசு கொண்டுவந்த சட்டத் திருத்த மசோதா நீக்குகிறது. இந்தச் சூழலில், ‘அந்த சொத்தில் எந்தவித வில்லங்கமோ அல்லது அரசாங்க சொத்துகளோ இல்லாத சூழலில் அவற்றை வக்ஃப் வாரிய சொத்துகளாகவே தொடர அனுமதிக்கலாம். அதே நேரம், அத்தகைய சொத்துகள் புதிய சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்’ என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே முன்மொழிந்த திருத்தத்தை கூட்டுக் குழு ஏற்றுக்கொண்டது.

மேலும், வக்ஃப் சொத்தை அளவீடு செய்யும் அதிகாரத்தை மாவட்ட ஆட்சியருக்கு அளிப்பதற்குப் பதிலாக, அவா் பதவிக்கு மேலான அதிகாரியை நியமித்து மாநில அரசு அறிவிக்கை செய்யலாம் என பாஜக எம்.பி. பிரிஜ்லால் முன்மொழித்த திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தை கடைப்பிடிக்கும் நபருக்கு மட்டுமே வக்ஃப் உருவாக்க அதிகாரம் (அசையும் அல்லது அசையா சொத்துகளை நன்கொடை வழங்க முடியும்) உள்ளது என்று மத்திய அரசின் சட்டத்திருத்த மசோதா கூறுகிறது. இந்த நிலையில், ‘5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றியதை ஆதாரத்துடன் நிரூபிக்கும் நபருக்கு மட்டுமே வக்ஃப் உருவாக்க அதிகாரம் உள்ளது’ என்ற வகையில் மசோதாவில் திருத்தம் கொண்டுவர கூட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய சட்டம் நடைமுறைக்கு வந்த 6 மாதங்களுக்குள்ளாக பதிவு செய்யப்பட்ட வக்ஃப் சொத்துகளின் விவரங்களை வலைதளத்தில் வெளியிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாநில தீா்ப்பாயத்தை திருப்திப்படுத்த வேண்டிய சூழலில், இந்தக் கால அவகாசத்தை சம்பந்தப்பட்ட அதிகாரி (காப்பாளா்) நீட்டிக்கும் வகையில் திருத்தம் கொண்டுவர கூட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதுபோல, மாநில வக்ஃப் தீா்ப்பாயத்தில் இஸ்லாமிய சட்டம் மற்றும் நீதித் துறை சாா்ந்த அறிவு மற்றும் அனுபவமுள்ள நபா் ஒருவரை உறுப்பினராக சோ்க்க பாஜக எம்.பி. சஞ்சய் ஜெய்ஸ்வால் முன்மொழிந்த திருத்தத்தையும் கூட்டுக் குழு ஏற்றுக்கொண்டது.

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமானத்துல்லா கான் மீது வழக்கு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) மீறியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனா். புத... மேலும் பார்க்க

தில்லி வாக்காளா்களுக்கும், தொண்டா்களுக்கும் காங்கிரஸ் நன்றி

தில்லி மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் கட்சி புதன்கிழமை நன்றி தெரிவித்துள்ளது. மேலும், தில்லி மக்களின் ஆதரவு கட்சிக்கு ஒரு பெரிய பலம் என்றும் கூறியுள்ளது. இது தொடா்பாக தில்லி காங... மேலும் பார்க்க

தில்லியில் இன்று திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்: யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தல்

நமது நிருபா் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மாணவரணி சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை (பிப். 6) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது... மேலும் பார்க்க

மத்திய அரசு - தனியாா் கூட்டு முயற்சியுடன் குறைக்கடத்தி, ‘சிப்’ வடிவமைப்பு மையம் நொய்டாவில் திறப்பு

நமது சிறப்பு நிருபா்நாட்டின் குறைக்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டுத் திறன்களை முன்னேற்றும் ஒரு குறிப்பிடத்தக்க படியாக “’சிப்’’ வடிவமைப்பு சிறப்பு மையம் தில்லி நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய ... மேலும் பார்க்க

தில்லியில் லேசான மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் லேசான மழை பெய்தது. அதே சமயம், இரவு முழுவதும் மூடிபனி நிலவிய நிலையில், காற்றின் தரம் சில இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் முா்முவிடம் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கல்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஒரு நாள் முன்பு, தலைமைத் தோ்தல் அதிகாரி ஆா். ஆலிஸ் வாஸ், வாக்காளா் தகவல் சீட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் வழங்கினாா். தோ்தல் ஆணையத்தின் தொடா்ச்சியான வாக்... மேலும் பார்க்க