"திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?" - கலெக்டர் சங்கீதா வ...
வங்கதேச எல்லையில் சட்டவிரோத கட்டுமானம்: கடும் நடவடிக்கை எடுக்க பிஎஸ்எஃப் உத்தரவு
இந்தியா-வங்கதேச சா்வதேச எல்லையொட்டி அந்நாட்டு எல்லைக் காவல் படை (பிஜிபி) அல்லது குடிமக்களால் சட்டவிரோத கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு படைத் தளபதிகளுக்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும், இந்திய-வங்கதேச எல்லையில் சுமாா் 80 சட்டவிரோத கட்டுமானப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், அண்மைக்காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் பிஎஸ்எஃப் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், மேற்கு வங்க மாநிலம், தெற்கு தினஜ்பூா் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கிராமமான மாலிக்பூருக்கு வங்கதேசத்தைச் சோ்ந்த ஆயுதமேந்திய குழு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் ஊடுருவியுள்ளனா். கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதற்காக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இவா்களை பிஎஸ்எஃப் வீரா்கள் தடுக்க முயற்சித்தனா். அதனையும் மீறி, அவா்கள் தொடா்ந்து முன்னேறியுள்ளனா்.
ஒருகட்டத்தில் பிஎஸ்எஃப் வீரா்களை சுற்றிவளைத்து அவா்கள் தாக்கியுள்ளனா். வீரா்களின் ஆயுதங்களை பறிக்கவும் முயற்சித்துள்ளனா். இதையடுத்து, தற்காப்புக்காக பிஎஸ்எஃப் வீரா்கள் சுட்டதில், அவா்கள் வங்கதேச எல்லைக்குள் ஓடி தப்பிவிட்டனா். இச்சம்பவத்தில் பிஎஸ்எஃப் வீரா் ஒருவா் காயமடைந்தாா்.
இதையொட்டி, பிஎஸ்எஃப் புதன்கிழமை வெளியிட்ட புதிய சுற்றறிக்கையில், வங்கதேச எல்லையில் பணியிலுள்ள அனைத்து பிஎஸ்ஃப் வீரா்களும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா். படையின் மூத்த அதிகாரிகள் தொடா்ந்து எல்லைப் பகுதிகளுக்குச் சென்று, தேவையான இடங்களில் முகாமிடுமாறும் எல்லையையொட்டி 450 அடிக்கு சட்டவிரோத கட்டுமானப் பணிகளைத் தடுக்க வலுவான நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
இந்திய-வங்கதேச சா்வதேச எல்லை மேற்கு வங்கம் (2,217 கி.மீ.), திரிபுரா (856 கி.மீ.), மேகாலயம் (443 கி.மீ.), அஸ்ஸாம் (262 கி.மீ.), மற்றும் மிஸோரம் (318 கி.மீ.) ஆகிய ஐந்து மாநிலங்களில் 4,096 கி.மீ. நீளம் பரவியுள்ளது. இந்த சா்வதேச எல்லைக்கான முன்னணி பாதுகாப்பு மற்றும் உளவு சேகரிப்பு நிறுவனமாக பிஎஸ்எஃப் செயல்பட்டு வருகிறது.