டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு: கதறி அழுத சோகம்!
வங்கதேச தொடர் ரத்து: இந்தியாவுக்கு இலங்கை அழைப்பு!
வங்கதேச அணிக்கு எதிரான தொடர் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்திய அணிக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்தியா - வங்கதேசம் இடையிலான 6 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 17 முதல் 31 ஆம் தேதி வரை திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது.
வங்கதேசத்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் டி20, ஒருநாள் தொடரில் விளையாடுவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இலங்கை கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்தக் கோரிக்கைக்கு இந்திய கிரிக்கெட் வாரியத் தரப்பில் அதிகாரபூர்வமாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. ஒருவேளை நடத்தப்படும்பட்சத்தில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களம்காண்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடர் ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. அதே நேரத்தில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் இலங்கை அணி விளையாடி வருகிறது.
இந்தத் தொடர்கள் முடிந்ததும் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டியில் விளையாட இலங்கை அணி கோரிக்கை வைத்துள்ளது. இருப்பினும், இந்திய கிரிக்கெட் வாரியம் காலம் தாழ்த்திவருகிறது. மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கீழ் செயல்படும் ஆசியான் கிரிக்கெட் கவுன்சிலின் ஆசியக் கோப்பைத் தொடருக்கான முடிவைப் பொறுத்து இந்தத் தொடர் குறித்து முடிவு செய்யப்படும்.
பிசிசிஐ செயலர் தேவ்ஜித் சாய்க்கியா இந்த வாரம் லண்டனில் நடைபெறும் லார்ட்ஸ் மைதானத்தில் இருப்பார். அங்கு அவர் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், அணித் தேர்வாளர் அஜித் அகர்கர், இந்திய அணி வீரர்களைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர், அந்த ஆலோசனையைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கைக்கு பதிலளிக்கப்படும்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே தொடர்ந்து வரும் மோதல்போக்கு காரணமாகவும் ஆசியக் கோப்பைக்கான தேதிகள் முடிவு செய்யப்படாமலும் உள்ளன. இந்திய அரசு ஒப்புதல் அளித்தால் ஆசியக் கோப்பைத் தொடர் செப்டம்பர் 10 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், முறையான ஒப்புதலுக்காக பிசிசிஐயும் காத்திருக்கிறது.
Sri Lanka request BCCI for white ball tour after Bangladesh series cancellation
இதையும் படிக்க :சர்வதேச கிரிக்கெட்டில் மற்றொரு மகுடம்..! ஜாகீர் கானை பின்னுக்குத் தள்ளிய ஜடேஜா!