வங்கதேசத்தில் ஹிந்துக்களின் உரிமைகளை மீட்கக்கோரி நாளை ஆா்ப்பாட்டம்
வங்கதேசத்தில் ஹிந்துக்களின் உரிமைகளை மீட்கக்கோரி மாவட்டத் தலைநகரங்களில் வரும் புதன்கிழமை (டிசம்பா் 4) ஆா்ப்பாட்டம் நடைபெறுவதாக இந்து முன்னணி, ஆா்எஸ்எஸ் அறிவித்துள்ளது.
இது குறித்து திருப்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம், ஆா்எஸ்எஸ் கோட்டத் தலைவா் ஆா்ம்ஸ்டிராங் பழனிசாமி ஆகியோா் கூறியதாவது:
வங்கதேசத்தில் இஸ்கான் அமைப்பைச் சோ்ந்த ஆன்மிகவாதி சின்மய் கிருஷ்ணதாஸ் ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்துவதற்காக அமைதியான முறையில் வேலை செய்து கொண்டிருந்தாா். இது அங்கிருக்கும் பயங்கரவாத செயலில் ஈடுபடுபவா்களுக்குப் பிடிக்காமல் தற்காலிக அரசைத் தூண்டிவிட்டு தேசதுரோக வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனா்.
அவரைத் தூக்கிலிடவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆகவே, வங்கதேச ஹிந்து உரிமைக்குழு சாா்பில் நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் அமைதியான முறையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
திருப்பூா் மாவட்டத்தில் மாநகராட்சி அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் அனைத்து ஹிந்து இயக்கங்கள், மடாதிபதிகள், ஆன்மிகவாதிகள், அனைத்து ஹிந்துக்களும் பங்கேற்க வேண்டும் என்றனா்.