வங்கதேசம்: 330 நாள்களில் 2,442 வகுப்புவாத வன்முறைகள்
வங்கதேசத்தில் கடந்த 330 நாள்களில் 2,442 வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக அந்நாட்டில் உள்ள சிறுபான்மையினா் அமைப்பு வியாழக்கிழமை தெரிவித்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவா்கள் போராட்டத்தால் பிரதமா் பதவியை ராஜிநாமா செய்த ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அதன்பிறகு வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பொறுப்பேற்றதில் இருந்து இந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்தது.
இதுகுறித்து வங்கதேச ஹிந்து பௌத்த கிறிஸ்தவ கவுன்சில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘கடந்த ஆண்டு ஆக.4-ஆம் தேதிமுதல் தற்போது வரை வங்கதேசத்தில் மொத்தம் 2,442 வகுப்புவாத வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான வன்முறை சம்பவங்கள் கடந்த ஆண்டு ஆக.4 முதல் ஆக.20 வரை அரங்கேறியுள்ளன.
சிறுபான்மையினரை குறிவைத்து கொலை, பாலியல் வன்கொடுமை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை, வழிபாட்டு தலங்கள் மீது தாக்குதல், வீடுகள் மற்றும் வணிக கடைகளை ஆக்கிரமித்தல், மதத்தை அவமதித்தாக பொய்யான குற்றச்சாட்டுகளின்கீழ் கைது செய்தல் என பல்வேறு விதமான அடுக்குமுறைகள் நிகழ்கின்றன. இதில் சிறுபான்மையின பெண்கள், ஆண்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
இவற்றை வங்கதேச இடைக்கால அரசு ஒப்புக்கொள்ளாமல் அரசியல் ரீதியாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் என நிராகரிக்கிறது.
மேலும், மக்கள் நல்வாழ்வுக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களில் இருந்து சிறுபான்மையின மக்களை இடைக்கால அரசு நீக்குகிறது. சிறுபான்மையின மக்களுக்கு உரிய நீதி கிடைக்க இடைக்கால அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பெட்டி...
வங்கதேச மக்கள் தொகையில்...
ஹிந்துக்கள் 7.95 %
பௌத்தா்கள் 0.61 %
கிறிஸ்தவா்கள் 0.30 %
பிற சமூகங்கள் 0.12 %
- 2022-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு தரவுகள்