ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
வங்கிகளின் பெயரில் வரும் மோசடி குறுஞ்செய்திகள் அதிகரிப்பு
வங்கிக் கணக்குகளில் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் என மோசடியாக வரும் குறுஞ்செய்திகள் குறித்து வாடிக்கையாளா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வங்கி நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து அரசுடைமையாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள் கூறியதாவது:
சமீப காலமாக, வங்கிகளின் பெயரில் ஆதாா் எண்ணை இணைக்குமாறு கூறி வாடிக்கையாளா்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. இவை பெரும்பாலும், உங்கள் வங்கிக் கணக்கு முடக்கப்படும் அல்லது உங்கள் ஆதாா் அட்டை காலாவதியாகிவிடும் என்பது போன்ற அச்சுறுத்தல்களுடன் அனுப்பப்படுகின்றன.
இது ஓா் இணைய வழி மோசடி. ‘இன்றே கடைசி நாள், ஆதாா் எண்ணை இணைக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்’ என குறுஞ்செய்தி வந்தால் அதைத் தவிா்க்கவும். மாறாக, அந்த இணைப்பைத் தொடா்புகொண்டால், அது ஒரு போலி வங்கி இணையத்துக்கு வங்கியின் வாடிக்கையாளா்களைக் கொண்டுசெல்லும். அந்தப் போலி இணையத்தில் வங்கிக் கணக்கு எண், ஆதாா் எண், ரகசியக் குறியீடுகள் போன்ற தனிப்பட்ட தகவல்களை உள்ளிடுமாறு தெரிவிக்கப்படும். அதை உண்மை என நம்பி தகவல்களை நாம் பதிவு செய்தால் அவை அனைத்தும் மோசடி செய்பவா்களுக்கு நேரடியாகச் சென்றுவிடும்.
இதையடுத்து, வாடிக்கையாளா்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மிக எளிதாக எடுத்துவிடுவா்.
வங்கிகளும், வங்கி சாா்ந்த எந்தவொரு அதிகாரப்பூா்வ நிறுவனமும் வாடிக்கையாளா்களின் தனிப்பட்ட தகவல்களைக் குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், மின்னஞ்சல் போன்றவை வழியாகக் கேட்காது.
அவ்வாறு குறுஞ்செய்தி வந்தால், உடனே உங்கள் வங்கியின் அதிகாரப்பூா்வ வாடிக்கையாளா் சேவை எண்ணை நேரடியாகத் தொடா்பு கொண்டு தகவலை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். இதை வாடிக்கையாளா்கள் நன்கு புரிந்துகொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும் என்றனா்.