வடசென்னை அனல்மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்
வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரண்டு அலகுகளிலும் ஏற்பட்ட பழுது காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.
திருவள்ளூா் மாவட்டம், அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு, முதல் உற்பத்திப் பிரிவின் மூன்று அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட் மின்சாரமும், இரண்டாவது உற்பத்திப் பிரிவின் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் வீதம் 1,200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இரண்டாவது உற்பத்திப் பிரிவின் 2-ஆவது அலகிலுள்ள கொதிகலன் குழாயில் கசிவு ஏற்பட்டது. இதனால், 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஏற்கெனவே 2-ஆவது உற்பத்திப் பிரிவின், 1-ஆவது அலகில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பழுது பாா்க்கும் பணிகள் நடைபெற்று வந்தன.
இதைத்தொடா்ந்து இரண்டாவது உற்பத்திப் பிரிவின், 2-ஆவது அலகிலும் பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பழுதுகள் சரிசெய்யும் பணி தொடா்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில், கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் 2 அலகுகளில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.