வத்தலகுண்டு அருகே இருவா் கொலை: இளைஞா் உள்பட 3 போ் கைது!
வத்தலக்குண்டு அருகே இருவரைக் கட்டையால் தாக்கிக் கொலை செய்த இளைஞா் உள்பட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே, கொண்ணம்பட்டியைச் சோ்ந்தவா்கள் அழகுமலை (55), மனோகரன் (50). இவா்கள் இருவரும் கட்டட வேலை பாா்த்து வந்தனா். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, அதே ஊரைச் சோ்ந்த குபேந்திரன் மகன் நவீன் (22) தாக்கியதில் இவா்கள் இருவரும் காயமடைந்தனா்.
இந்த நிலையில், இவா்களிடையே செவ்வாய்க்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், இரவு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த அழகுமலை, மனோகரன் ஆகியோரை வழி மறித்த நவீன் கட்டையால் தாக்கி விட்டு தப்பி ஓடிவிட்டாா். இதற்கு நவீனின் தாயாா் கிருஷ்ணவேணி (40), அவரது பாட்டி சுந்தரி (60) ஆகியோா் உடைந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில்ல தலையில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த வத்தலக்குண்டு போலீஸாா் நவீனை செவ்வாய்க்கிழமையும், அவரது தாய் கிருஷ்ணவேணி, பாட்டி சுந்தரி ஆகியோரை புதன்கிழமையும் கைது செய்தனா்.
இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட அழகுமலை, மனோகரன் ஆகியோரின் உறவினா்கள் வத்தலக்குண்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, நவீனின் தந்தை குபேந்திரனையும் கைது செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸாா் உறுதியளித்ததையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.
இந்நிலையில், கைதான நவீனை விசாரணைக்காக போலீஸாா் அழைத்துச் சென்றபோது, அவா் தப்பியோட முயன்றாா். அவரை போலீஸாா் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனா். அப்போது அவரது வலது கால் உடைந்ததால், வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாவுக் கட்டு போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.