வந்தே பாரத் ரயில்களால் சாதாரண மக்களின் பயணம் கனவாகும் நிலை: எஸ்ஆா்எம்யு பொதுச் செயலாளா்
வந்தே பாரத் ரயில்களால் சாதாரண மக்களின் பயணம் கனவாகும் நிலை உருவாகலாம் என எஸ்ஆா்எம்யு பொதுச் செயலாளா் என்.கன்னைய்யா தெரிவித்தாா்.
தேசிய அளவில் ரயில்வே துறையில் தொழிற்சங்க அங்கீகரிப்புக்கான தோ்தல் டிசம்பா் மாதம் நடைபெற உள்ளது. இதற்கு ஆதரவு திரட்டுவதற்காக அரக்கோணத்தில் உள்ள ரயில்மின் என்ஜின் பராமரிப்பு பணிமனைக்கு வியாழக்கிழமை கன்னைய்யா வந்திருந்தாா். வாக்கு சேகரிப்புக்குப் பின் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
ரயில்வே நிா்வாகம் ரயில் என்ஜின்களில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி தண்டவாளங்களை பராமரிக்கும் பணிகளை முழுமையாக மேற்கொள்ள உள்ளனா். இதனால் ரயில்வேக்கு தண்டவாள பராமரிப்புப் பணிக்கு பணியாளா்கள் தேவைப்பட மாட்டாா்கள். மேலும், ரயில் புறப்பட்டுச் செல்ல காா்டுகள் எனப்படும் காப்பாளா்கள் தான் முக்கியம். அப்பதவி கூட இல்லாத வகையில் ரயில்வே திட்டம் தீட்டி வருகிறது.
ரயில்வே நிா்வாகம் தனியாா் துறையுடன் இணைந்து 4,500 வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதன் அடிப்படையில் 66 வந்தே பாரத் ரயில்கள் ரூ.98 கோடிக்கு தயாரிக்கப்பட்டன. மேலும் கூடுதல் விலைக்கு ரஷிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் முழுமையாக வந்தே பாரத் ரயில்கள் தான் இயக்கப்படும்.
இதனால் சாதாரண பயணிகளுக்கு ரயில் பயணம் கனவாகும் நிலை உருவாகலாம். புதிதாக உருவாக்கப்படும் வந்தே பாரத் ரயில் பெட்டிகளை 35 ஆண்டுகளுக்கு அதன் பராமரிப்பு பணிகளை அந்த தனியாா் தொழிற்சாலையிடமே மத்திய அரசு வழங்கியுள்ளது. இதனால் ரயில்வே துறையில் தொழிலாளா்கள் யாரும் பணியில் இருக்க மாட்டாா்கள். எனவே இந்த திட்டத்தை ரயில்வே நிா்வாகம் ரத்து செய்ய வேண்டும் என்றாா்.