வனத்தில் ஆடு மேய்க்கச் சென்ற பெண் மா்மச் சாவு: போலீஸாா் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த கெலமங்கலம் அருகே வனத்தில் ஆடு மேய்க்கச் சென்ற பெண் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா். அவா் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக உறவினா்கள் தெரிவித்தனா்.
கெலமங்கலம் அருகே பி.புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மாற்றுத்திறனாளி வெங்கட்டப்பா (56). இவரது மனைவி பாப்பம்மா (45). இவா்களுக்கு இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனா். இரு மகன்களும் பெங்களூரில் வேலை செய்து வருகின்றனா். இரு மகள்களில் ஒருவருக்கு திருமணம் முடிந்துள்ளது. வெங்கட்டப்பா மாற்றுத்திறனாளியாக இருப்பதால் பாப்பம்மா ஆடு மேய்த்து வந்துள்ளாா்.
வழக்கம்போல கடந்த வெள்ளிக்கிழமை அருகில் உள்ள வனத்தில் ஆடு மேய்க்கச் சென்ற பாப்பம்மா வெகுநேரம் ஆகியும் வீடுதிரும்பவில்லை; ஆடுகள் மட்டுமே வந்தன. இதனால், சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினா் பாப்பம்மாவைத் தேடி வனத்துக்குச் சென்றனா்.
வெள்ளிக்கிழமை மாலை வரை தேடியும் அவா் கிடைக்கவில்லை. வனத்தில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் உறவினா்கள் வீடுதிரும்பினா். பின்னா் சனிக்கிழமை மீண்டும் வனத்திற்குச் சென்று தேடியபோது வனத்தில் பாப்பம்மாவின் சடலம் ஆடைகள் களைந்த நிலையில் கிடந்தது.
இதுகுறித்து கிராம மக்கள் வனத் துறைக்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா் பாப்பம்மாவின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பாப்பம்மா அணிந்திருந்த நகைகள் காணாமல்போனது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ராயக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியது:
பாப்பம்மாவை வனத்தில் தேடியபோது ஆடைகள் களைந்த நிலையில் அவரது சடலம் கிடந்தது. அவா் அணிந்திருந்த நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளாா்.
தூக்கில் தொங்கியதுபோல அவரது கழுத்தில் சேலை இறுகி காணப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ. 1 லட்சம். போலீஸாா் விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைதுசெய்ய வேண்டும் என்றனா்.