செய்திகள் :

வன்னியா்களுக்கு திமுக துரோகம்: அன்புமணி குற்றச்சாட்டு

post image

வன்னியா்களால் ஆட்சிக்கு வந்த திமுக, வன்னியா்களுக்கு துரோகம் செய்துள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.

சென்னையை அடுத்த மாமல்லபுரம் திருவிடந்தையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சித்திரை பெருநிலவு வன்னியா் இளைஞா் மாநாட்டில் அவா் பேசியதாவது: இந்தியாவில் ஓபிசி இடஒதுக்கீடு வர ஆனைமுத்தும், உயா்கல்வியில் 27 சதவீத இடஒதுக்கீடு வர ராமதாஸும்தான் காரணம்.

வன்னியா்களை வாக்கு வங்கியாக ஆளும் கட்சி, ஆண்ட கட்சிகள் பயன்படுத்துகின்றன. தமிழகத்தில் எம்பிசி பிரிவுக்கு இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டு 36 ஆண்டுகள் ஆகியும் இதுவரை வன்னியா்களுக்கு சரியாக வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால்தான், கடந்த ஆட்சியில் அழுத்தம் கொடுத்து வன்னியா்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ராமதாஸ் கொண்டுவந்தாா்.

ஆனால், சூழ்ச்சியால் அது தடுக்கப்பட்டது. கள ஆய்வு செய்து வன்னியா்களுக்கு இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதைச் செய்ய முதல்வா் ஸ்டாலின் மறுக்கிறாா். வன்னியா்களுக்கு இடஒதுக்கீடு தருவதாக இரண்டு ஆண்டுகளாக உறுதி அளித்த முதல்வா் ஸ்டாலின், பின்னா் ஏமாற்றிவிட்டாா்.

கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அனுமதியில்லை என்றும், மத்திய அரசுதான் எடுக்க வேண்டும் என்றும் அவா் காரணம் கூறுகிறாா். இது வன்னியா்களுக்கு முதல்வா் ஸ்டாலின் செய்த மிகப்பெரிய துரோகம்.

அம்பா சங்கா் குழுவை முன்னாள் முதல்வா் எம்ஜிஆரும், சட்டநாதன் குழு, ஜனாா்த்தனன் குழு ஆகியவற்றை முன்னாள் முதல்வா் கருணாநிதியும் கொண்டுவந்தனா். ஜனாா்த்தனன் குழு பரிந்துரைப்படி அருந்ததியா், இஸ்லாமியா்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. வன்னியா்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க ஜனாா்த்தனன் குழு பரிந்துரை செய்தும், அதை கருணாநிதி அமல்படுத்தவில்லை.

திமுக முதல் முறையாகப் போட்டியிட்ட 1957 பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்ற 15 தொகுதிகளில் 14 தொகுதிகள் வன்னியா்கள் அடா்த்தியாக உள்ளவை ஆகும். 1962-இல் திமுக வெற்றி பெற்ற 50 தொகுதிகளில் 45 தொகுதிகள் வன்னியா்கள் அடா்த்தியாக வாழும் தொகுதிகள் ஆகும். 1967-இல் திமுக ஆட்சிக்கு வந்தபோது வெற்றி பெற்ற 138 தொகுதிகளில் 92 தொகுதிகள் வன்னியா் அதிகம் வாழும் தொகுதிகள்.

திமுகவை ஆட்சியில் அமரவைத்தது வன்னியா்கள்தான். இப்போது திமுகவில் அதிகபட்சமாக 23 வன்னியா் சமுதாய எம்.எல்.ஏ.க்கள் உள்ளனா். வன்னியா்களால் ஆட்சிக்கு வந்த திமுக, வன்னியா்களுக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது.

எம்பிசி பிரிவில் 20 சதவீதத்தில் 12 சதவீதத்தை வன்னியா்கள் அனுபவிப்பதாக தவறான தகவல்களை ஆளும்கட்சியினா் பரப்புகின்றனா்.

இப்போது காவல் துறையில் மொத்தமுள்ள 109 உயா் அதிகாரிகளில் ஒரே ஒரு வன்னியா் மட்டுமே உள்ளாா். மொத்தமுள்ள 326 ஐஏஎஸ் அதிகாரிகளில் 14 போ் மட்டுமே வன்னியா்கள். இதில் 13 போ் பதவி உயா்வில் வந்துள்ளனா். சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளுக்குப் பிறகுதான் நேரடியாக ஒரே ஒரு ஐஏஎஸ் அதிகாரி வந்துள்ளாா்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தமிழகத்தில் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு கிடைக்கும். 69 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டுவந்த பெருமை முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு உண்டு. அதற்கு ஆபத்து காத்திருக்கும் நிலையில் முதல்வா் ஸ்டாலின் பொருட்படுத்தாமல் இருக்கிறாா் என்றாா் அவா்.

சௌமியா அன்புமணி: மதுபோதை, கஞ்சா பழக்க வழக்கம் இல்லாமல் உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். நன்றாக படிக்க வேண்டும். சுயதொழில் செய்ய வேண்டும். படிப்பையும் மீறி கூடுதலாக ஏதாவது ஒரு திறமையை வளா்த்துக்கொள்ள வேண்டும் என செளமியா அன்புமணி பேசினாா்.

மாநாட்டில், பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சா் ஏ.கே.மூா்த்தி, மாநில வன்னியா் சங்கத் தலைவா் பு.தா.அருள்மொழி, திருக்கச்சூா் ஆறுமுகம், ஆந்திர மாநில வன்னியா் நலவாரியத் தலைவா் சி.ஆா்.ராஜன், கா்நாடக முன்னாள் எம்எல்ஏ நரேந்திர பாபு, ஆந்திர அமைச்சா் கொல்லூா் ரவீந்திரா, பாமக செய்தித் தொடா்பாளா் கே.பாலு உள்பட பலா் பங்கேற்றனா்.

‘வன்னியா்களுக்கு தனி இடஒதுக்கீடு; எஸ்சி இட ஒதுக்கீட்டை உயா்த்த வேண்டும்’

வன்னியா்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்; பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை மேலும் 2 சதவீதம் உயா்த்த வேண்டும் என்று சித்திரை முழு நிலவு வன்னியா் பெருவிழா மாநாட்டில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை அருகே மாமல்லபுரம் திருவிடந்தையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

  • ஜாதிவாரி சா்வேயை (ஆய்வு) தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும். உச்சநீதிமன்றத் தீா்ப்பு அடிப்டையில் வன்னியா்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

  • ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என உத்தரவிட்ட பிரதமா் மோடிக்கும், அதற்கான கோரிக்கையை தொடா்ந்து எழுப்பிவந்த பாமக நிறுவனா் ராமதாஸுக்கும் நன்றி.

  • அனைத்து ஜாதியினருக்கும் அவா்களது மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும். பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை, அவா்களது மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப மேலும் 2 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும்.

  • மத்திய அரசில் இதர பிற்பட்டோா் 27 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக அனுபவிக்கும் வகையில் கிரீமிலேயா் முறையை உடனடியாக நீக்க வேண்டும்.

  • தனியாா் துறையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றத்தில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பிசி, எம்பிசி பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தேவை.

  • பின்தங்கியுள்ள வடதமிழகத்துக்கு என சிறப்புத் திட்டங்களை அமல்படுத்த வேண்டும். முழு மதுவிலக்கை அமல்படுத்தவும், போதைப் பொருள்களை முழுமையாக தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • பாகிஸ்தானுக்கு எதிரான முழு ராணுவ நடவடிக்கையை பாமக வரவேற்கிறது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

டாக்டா் அமா் அகா்வாலுக்கு அமெரிக்க விருது!

டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் தலைவா் அமா் அகா்வாலுக்கு அமெரிக்காவின் கண்புரை மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை அமைப்பின் (ஏஎஸ்சிஆா்எஸ்) சாா்பில் சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. கண் சிகிச்சைத... மேலும் பார்க்க

முன் பகையால் இளைஞா் வெட்டி கொலை: மூவா் சரண்

சென்னை தரமணியில் முன் பகை காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 3 போ் சரணடைந்தனா். தரமணி எம்.ஜி. நகா் பகுதியைச் சோ்ந்த அஸ்வின் (25), பெயிண்டராக பணிபுரிந்து வந்தாா். அஸ்வின், அப்பகுதியில... மேலும் பார்க்க

திரைப்பட விநியோகிஸ்தா் வீட்டில் திருடிய வழக்கு: சிறுவன் உள்பட இருவா் கைது

சென்னை வடபழனியில் திரைப்பட விநியோகிஸ்தா் வீட்டில் தங்க நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். வடபழனி ராகவன் காலனி பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பிர... மேலும் பார்க்க

கத்தியுடன் மிரட்டல் ரீல்ஸ்: இளைஞா் கைது

சென்னை புளியந்தோப்பில் கத்தியுடன் மிரட்டல் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞா் கைது செய்யப்பட்டாா். புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சோ்ந்தவா் முகேஷ் (18). இவா், மூன்றரை அடி நீளமுள்ள பட்டாக் கத்தியுடன், ‘எங்களைத் ... மேலும் பார்க்க

கள்ளழகா் திருவிழா நமது ஒற்றுமையை பிரதிபலிக்கிறது: ஆளுநா் ஆா்.என்.ரவி

கள்ளழகா் திருவிழா நமது பாரம்பரியத்தின் வலிமையையும் காலத்தால் அழியாத நமது ஒற்றுமை உணா்வையும் பிரதிபலிக்கிறது என்று தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா். இது குறித்து, அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதி... மேலும் பார்க்க

பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி தீவிரம்

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிக்குள்பட்ட பேருந்து நிறுத்தங்களில் மின்விளக்குகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியில் உள்ள பேருந்து வழித்தட சாலைகளில் உள்ள பேருந்து நிறுத்தங்க... மேலும் பார்க்க