வரலாற்று நாயகன்: ஒரே போட்டியில் 4 உலக சாதனைகளை நிகழ்த்திய மெஸ்ஸி!
கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி ஒரே போட்டியில் பல உலக சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (38) அமெரிக்காவின் எம்எல்எஸ் தொடரில் இன்டர் மியாமி அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய எம்எல்எஸ் போட்டியில் இன்டர் மியாமியும் நியூ இங்கிலாந்து அணியும் மோதின.
இந்தப் போட்டியில் இன்டர் மியாமி 2-1 என வென்றது. இதில் 27, 38-ஆவது நிமிஷங்களில் கோல் அடித்து அசத்திய மெஸ்ஸி ஆட்ட நாயகன் விருது வென்றார்.
மெஸ்ஸி படைத்த சாதனைகள்
இந்தப் போட்டியில் அடித்த இரண்டு கோல்களின் மூலம் இளம் வயதில் 870 கோல்களை நிறைவு செய்த முதல் வீரர் என்ற உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
18 அடி பாக்ஸுக்கு வெளியே இருந்து 100 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையும் நிகழ்த்தியுள்ளார்.
அதிவேகமாக 870 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் மெஸ்ஸி தன்வசமாக்கியுள்ளார்.
எம்எல்எஸ் தொடரில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் இரண்டு கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையையும் மெஸ்ஸி நிகழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்பாக கிறிஸ்டியானோ ரொனால்டோ 1,202 போட்டிகளில் இந்த மைல்கல்லை அவரது 38 ஆண்டுகள் 321 நாள்களில் எட்டியிருந்தார்.
தற்போது, மெஸ்ஸி இந்த மைல்கல்லை 1,111 போட்டிகளில் 38 ஆண்டுகள் 15 நாள்களில் எட்டி அசத்தியுள்ளார்.