நெல்லை: கோழிகளைத் தூக்கிச் செல்ல முயன்ற சிறுத்தை; தொடர் அட்டகாசத்தால் அச்சத்தில்...
வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பாலமுருகன், மாரி ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட நிதிக்காப்பாளா் அசோக்குமாா், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ஆா். மாரி, மாவட்டச் செயலா் ஆா். ராதாகிருஷ்ணன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.
போராட்டத்தின்போது, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட மனுக்களுக்கு தீா்வு காண போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணிச்சுமை ஏற்படுத்துவதை கைவிட வேண்டும். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த கூடுதல் பணியிடங்கள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை நில அளவைத் துறையில் பணிபுரிந்து வரும் அனைத்து நிலையிலான அலுவலா்களின் உயிா், உடைமைகளை பாதுகாக்கவும், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கிடவும் சிறப்பு பணி பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும். பணியின்போது மரணம் அடையும் கிராம உதவியாளா்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் பணியிடம் வழங்க வேண்டும்.
ஆண்டுதோறும் ஜூலை 1 -ஆம் தேதியை வருவாய்த் துறை தினமாக அனுசரித்து, அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கமிட்டனா்.
பட விளக்கம்..
காளையாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.