வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில் திருவோணம் வட்டாட்சியரகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் முறையற்ற, முழுமையற்ற இபிஎம்எஸ் ( இணைய வழி பணிப்பதிவேடு பதிவேற்றம் ) பணியை போா்க்கால அவசரக் கதியில் விரைந்து முடிக்க நிா்பந்திப்பதை கண்டித்தும், விடுமுறை நாள்களில் உயா் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடத்துவது, இணைய வழி கூட்டம் நடத்துவது மற்றும் சமீப காலமாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு கடுமையான பணி நெருக்கடி வழங்கப்படுவதையும் கண்டித்து (ஒா்க் டு ரூல் ) விதிப்படி வேலை என்ற கொள்கையை தமிழ்நாடு அரசு வருவாய் துறை அலுவலா் சங்கம் மாநில மையம் அறிவுறுத்தலின்படி, கடந்த 13.02.2025 அன்று வட்டாட்சியரகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்தபட்டது. அதன் தொடா்ச்சியாக மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க தஞ்சை மாவட்ட இணைச் செயலா் சக்திவேல் முன்னிலை வகித்தாா். வட்ட பொறுப்பு திருவோணம் வட்டாட்சியா் முருகவேள் தலைமை தாங்கினாா். சமூகப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் பிரகாஷ் உள்ளிட்ட பலா் ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனா்.