வரைவு பட்டியல்: விடுபட்ட வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்: தேஜஸ்வி!
பிகாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பல வாக்காளர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.
பாட்னாவில் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது,
தேஜஸ்வி காட்டிய வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக அவருக்கு அனுப்பபட்ட தேர்தல் ஆணையத்தின் நோட்டீஸுக்கு பதிலளிப்பதாக அவர் கூறினார்.
விடுபட்ட பல வாக்காளர்களைப் பற்றி தேர்தல் ஆணையம் எங்களுக்குப் பதில் கூற வேண்டும். ஒரே வீட்டைச் சேர்ந்த 50 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தில் இதுபோன்ற பல முரண்பாடுகள் உள்ளன. "நாங்கள் அதையே தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி, நீதிமன்றத்தில் எங்கள் தரப்பை முன்வைப்போம்," என்று அவர் கூறினார்.
தேஜஸ்வி யாதவ் மீது பாட்னாவில் உள்ள திகா காவல் நிலையத்தில் இரண்டு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் (EPIC) வைத்திருப்பதாகக் கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை வழக்குரைஞர் ராஜீவ் ரஞ்சன் சமர்ப்பித்துள்ளார், அதற்குத் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக சிறப்புத் தீவிர திருத்தப் பணி நடந்து வரும் நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையத்தைக் கேள்வி கேட்டதற்காகத் தேஜஸ்வி யாதவ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை மத்திய ஜவுளி அமைச்சர் கிரிராஜ் சிங் கடுமையாகச் சாடினார். பொய்களையும், குழப்பத்தையும் பரப்புவதாக அவர் குற்றம் சாட்டினார்.
தேர்தல் ஆணையம் ஒரு அரசியலமைப்பு நிறுவனம், ஆனால் அவர்கள் இதையும் விட்டுவைக்கவில்லை. தேஜஸ்வி யாதவ் இவ்வளவு அற்பமான பொய்களைப் பேசி குழப்பத்தைப் பரப்பினால், அந்த நிறுவனம் நிச்சயமாக சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுக்கும் என்று கிரிராஜ் சிங் பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
தேஜஸ்வி யாதவ் தனது EPIC (வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை) எண் மாற்றப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டிய சில நாள்களுக்குப் பிறகு அமைச்சர் கிரிராஜின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.