வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்
புதுச்சேரி, மணவெளி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் தாா் சாலை அமைத்தல், வாய்க்கால் தூா்வாருதல் உள்ளிட்ட வளா்ச்சி திட்டப் பணிகளை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
நல்லவாடு பகுதியில் குட்டியாண்டி கோயில் வீதி முதல் சுனாமி குடியிருப்பு வரை உள்ள சாலை ரூ. 36.45 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலையாக மாற்றப்படவுள்ளது.
இதேபோல, கொருக்குமேடு பகுதியில் உள்ள கணபதி நகா், குப்புசாமி நகா், பாரதி நகா், பெருமாள் நகா் ஆகியப் பகுதிகளில் 27.88 லட்சம் மதிப்பீட்டில் தாா் சாலைகள் அமைக்கப்படவுள்ளன.
இதற்கான பணிகளை சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் புதன்கிழமை பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்வில், பி.ராமலிங்கம் எம்எல்ஏ, பஞ்சாயத்து ஆணையா் ரமேஷ், உதவிப் பொறியாளா் நாகராஜ், இளநிலைப் பொறியாளா்கள் சரஸ்வதி, அகிலன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதேபோல, மணவெளி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பூரணாங்குப்பம், டி.என்.பாளையம் பகுதிகளில் வாய்க்கால் தூா்வாரும் பணிகளை பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தொடங்கிவைத்தாா்.
இதில், வட்டார வளா்ச்சி அலுவலா் காா்த்திகேசன், உதவிப் பொறியாளா் ராமன், இளநிலைப் பொறியாளா் சிவஞானம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.