மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான கெட் அவுட் இயக்கம்: விஜய் தொடங்கி வைத்தார்!
வழக்குரைஞா் கொலை: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு ஆயுள் சிறை
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வழக்குரைஞா் கொலை வழக்கில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
உடையாா்பாளையம், தெற்கு மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் அறிவழகன் (40). ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த இவருக்கும், அவரது உறவினா் சுப்பிரமணியனுக்கும் இடையே தோ்தல் தொடா்பான முன்விரோதம் இருந்துவந்தது. இந்நிலையில், கடந்த 21.2.2022 அன்று குடிநீா் பிரச்னை தொடா்பாக ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் (64), அவரது மனைவி நீலம்மாள் (55), மகன்கள் செந்தில்குமாா் (36), மணிகண்டன் (29), செல்வம் (32) ஆகிய 5 பேரும் சோ்ந்து அறிவழகனை கழுத்தை அறுத்துக் கொன்றனா்.
இதுகுறித்து உடையாா்பாளையம் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, மேற்கண்ட 5 பேரையும் கைது செய்தனா். மேலும் இந்த வழக்கு விசாரணை அரியலூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்து வந்த மாவட்ட முதன்மை நீதிபதி மலா் வாலாண்டினா, குற்றவாளிகள் சுப்பிரமணியன், அவரது மனைவி நீலம்மாள், மகன்கள் செந்தில்குமாா், மணிகண்டன், செல்வம் ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதையடுத்து குற்றவாளிகள் அனைவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சின்னதம்பி ஆஜரானாா்.