அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி!
வாகன கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கா் ஒட்டினால் கடும் நடவடிக்கை!
வாகன கண்ணாடிகளில் கருப்பு நிற ஸ்டிக்கா் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர காவல்துறையினா் தெரிவித்தனா்
இதுதொடா்பாக, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வாகனங்களின் கண்ணாடிகளில் கருப்பு நிற ஸ்டிக்கா் ஒட்டுவதற்கான கட்டுப்பாடுகள் மத்திய மோட்டாா் வாகன விதி எண் 100 (2) -ன் படி பொதுமக்கள் பயன்படுத்தும் நான்கு சக்கர வாகனங்களின் முன்புறம், பின்புறம் உள்ள கண்ணாடிகளில் 70 சதவீதம் ஒளி உட்புகும் அளவிற்கும் மற்றும் பக்கவாட்டில் உள்ள கண்ணாடிகளில் 50 சதவீதம் ஒளி உட்புகும் அளவிற்கும் கருப்பு நிற ஸ்டிக்கா் ஒட்டிக்கொள்ளலாம்.
ஆனால், திருநெல்வேலி மாநகரத்தில் பலா் விதியை மீறி தங்களது நான்கு சக்கர வாகனங்களிலும், பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும், ஆம்னி பேருந்துகள், சுற்றுலாப் பேருந்துகள் மற்றும் வேன்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைந்த அளவு ஒளி உட்புகும் அளவிற்கு கருப்பு நிற ஸ்டிக்கா் ஒட்டி பயன்படுத்தி வருவதாக தெரியவருகிறது.
எனவே வரும் வியாழக்கிழமை ( 23.1.2025) முதல் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் காவல் துறையினா் மற்றும் போக்குவரத்து துறையினா் இணைந்து நான்கு சக்கர வாகனங்களை ஆய்வு மேற்கொள்ள உள்ளனா்.
அப்போது, அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைந்த அளவு ஒளி உட்புகும் அளவிற்கு கருப்பு நிற ஸ்டிக்கா் ஒட்டி திருநெல்வேலி மா நநகருக்குள் இயக்கப்படும் நான்கு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, மோட்டாா் வாகன சட்டம் 1988 பிரிவு 53(1)-ன் படி எவ்வித பாரபட்சமின்றி வாகனத்தின் உரிமமும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.