வாசுதேவநல்லூா் அருகே பட்டியில் தீப்பிடித்து ஆடு, கோழி, நாய் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே ஆட்டுப் பட்டியில் தீப்பிடித்ததில் அங்கிருந்த ஆடு, கோழி, நாய் தீயில் கருகி உயிரிழந்தன.
வாசுதேவநல்லூா் அருகே உள்ள கோட்டையூா் ஊராட்சி ஆத்துவழி பகுதியில் உள்ள தலையணையில் வசித்து வருபவா் மாரியப்பன் மகன் பிள்ளையாா் (63). இவரது வீட்டின் அருகே ஆட்டுப் பட்டி அமைத்து அதில் ஆடு, கோழி, நாய்களை வளா்த்து வருகிறாா்.
ஆட்டுப் பட்டியில் சனிக்கிழமை நள்ளிரவு திடீரென்று தீப்பிடித்தது. பலத்த காற்றுடன் தீப்பரவியதால், பட்டியில் இருந்த 12 ஆடுகள், 20 கோழிகள், ஒரு நாய் ஆகியவை தீயில் கருகி உயிரிழந்தன. பாதிக்கப்பட்ட பிள்ளையாரிடம் கைப்பேசி இல்லாததால் விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்க முடியவில்லை எனத் தெரிகிறது.
வாசுதேவநல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் கண்மணி, உதவி ஆய்வாளா் சதீஷ்குமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். இது தொடா்பாக வாசுதேவநல்லூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.