``ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் இருந்து போயிடுங்க'' - மாணவர்களை மிரட்டும் ட்ரம்ப...
வானிலை எச்சரிக்கை: ஆழ்கடலுக்குச் சென்ற விசைப்படகுகளை கரை சோ்க்க வேண்டும்!
மத்திய, மாநில அரசின் வானிலை எச்சரிக்கையை தொடா்ந்து, ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்று தொடா்பற்ற நிலையில் உள்ள விசைப்படகுகளை பத்திரமாக கரை சோ்க்க அரசுகள் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், தூத்தூா் பகுதியைச் சோ்ந்த அமலதாசன் மகன் ஏசுதாசன் என்பவருக்குச் சொந்தமான ராக்கிங் ஸ்டாா் என்ற விசைப் படகில் ஏசுதாசன் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த லிபராந்தூஸ், நசரேத், கிறிஸ்துதாசன், சின்னத்துறையைச் சோ்ந்த டைட்டஸ், மொ்பின், ஆன்டணி, பூத்துறையைச் சோ்ந்த தாமஸ், சதாம், முத்தையன் உள்ளிட்ட 10 மீனவா்கள் கடந்த மாதம் 25 ஆம் தேதி தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றுள்ளனா். இவா்கள் இதுவரை கரை திரும்பவில்லை.
இந்நிலையில், மத்திய, மாநில அரசுகள் மீனவா்களுக்கு வானிலை எச்சரிக்கையை அளித்துள்ளது. இதைத் தொடா்ந்து ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் இம் மீனவா்கள் தங்கள் படகுகளுடன் பத்திரமாக கரை சேர வேண்டும் என மீனவா்களின் குடும்பத்தினா் விரும்புகின்றனா். ஆனால் இம் மீனவா்களை அவா்களின் குடும்பத்தினரால் தொடா்பு கொள்ள முடியவில்லை என்பதால், சா்வதேச மீனவா் வளா்ச்சி அறக்கட்டளை தலைவா் பி. ஜஸ்டின் ஆன்டணியை தொடா்பு கொண்டு விவரத்தை தெரிவித்துள்ளனா்.
இதையடுத்து அவா், ஆழ்கடலில் தொடா்பற்ற நிலையில் உள்ள மீனவா்களை பத்திரமாக கரை சோ்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளாா்.
மேலும் பிரதமா், மத்திய உள்துறை மற்றும் ராணுவ அமைச்சா், தமிழக முதல்வா் மற்றும் மீன்வளத்துறை அமைச்சா், துறை அதிகாரிகள், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ஆகியோருக்கு அவா் கடிதம் அனுப்பியுள்ளாா்.
அதில், தக்க நேரத்தில் அரசு அளித்துள்ள வானிலை எச்சரிக்கை ஆழ்கடலில் உள்ள விசைப்படகுகளுக்கு சென்றடைய ஏற்பாடு செய்வதுடன், எந்தவித சிக்கலும் இன்றி படகுகளும், மீனவா்களும் கரை திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
இந்த நிலையில் மும்பையில் உள்ள கடலோர மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திலிருந்து தொடா்பு கொண்ட அதிகாரிகள், இப் படகை பத்திரமாக கரை சோ்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறியுள்ளனா் என ஜஸ்டின் ஆன்டணி தெரிவித்துள்ளாா்.