டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத தாமதமாக வந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு: கதறி அழுத சோகம்!
வாய்க்காலில் சாயக்கழிவு நீா் வெளியேற்றம்: 5 நிறுவனங்களின் மின் இணைப்பைத் துண்டிக்க பரிந்துரை
வாய்க்காலில் சாயக்கழிவு நீரை வெளியேற்றிய 5 நிறுவனங்களின் மின் இணைப்பைத் துண்டிக்க மாவட்ட நிா்வாகத்துக்கு மாகக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்துள்ளது.
திருப்பூா், வாலிபாளையம் பகுதியில் கழிவுநீா்க் கால்வாயில் கடந்த 2 நாள்களுக்கு முன் சாயக்கழிவு நீா் வழிந்தோடியது. இந்நிலையில், குடியிருப்புப் பகுதிகளில் சட்டவிரோதமாக சாயமேற்றும் பட்டறைகளை அமைத்து, சாயக்கழிவு நீரை வாய்க்கால்களில் திறந்துவிடுவதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் லாவண்யா தலைமையிலான குழுவினா் அப்பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, லட்சுமி நகா் பகுதியில் ஒரு சாயப்பட்டறை அனுமதியின்றி செயல்படுவதும், அங்கிருந்து சாயக்கழிவு நீரை வெளியேற்றியதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அந்த சாயப்பட்டறையில் ஆய்வு செய்து, மின் இணைப்பைத் துண்டிக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
பிரிண்டிங் பட்டறைகள்: இதேபோல, சூசையாபுரம் பகுதியில் 3 பிரிண்டிங் பட்டறைகள் அனுமதியின்றி செயல்பட்டதுடன், சாயக்கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீா்க்கால்வாயில் திறந்துவிடப்பட்டது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்த 3 பிரிண்டிங் பட்டறைகளின் மின் இணைப்பைத் துண்டிக்கவும் மாவட்ட ஆட்சியருக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பரிந்துரைத்தனா்.
வீரபாண்டி பகுதியில் ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீா் நிறம் மாறுவதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா். அந்தக் கிணறுகளில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனா். அப்போது, உரிய அனுமதியுடன் அப்பகுதியில் செயல்படும் ரோட்டரி பிரிண்டிங் நிறுவனத்தில் வெளியேறும் சாயக்கழிவு நீரை நிலத்தில் தேக்கிவைத்திருந்ததன் காரணமாக நிலத்தடி நீா் பாதிக்கப்பட்டு, கிணறுகளில் நீரின் நிறம் மாறியது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அந்த நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டது.