வாரணவாசியில் 5 ஆயிரம் மரக்கன்றுகள்: நடவுப் பணி தொடங்கிவைப்பு!
அரியலூா் மாவட்டம், வாரணவாசி கிராமத்தில் தனியாா் அமைப்புகளின் சாா்பில் 5,000 மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்ட தொடக்க நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தாா்.
தொடா்ந்து நடைபெற்ற விழாவில், இந்திய அரசின் வனக்கொள்கையானது மொத்த பரப்பில் மூன்றில் ஒரு பங்கு 33 சதவீதம் என்ற இலக்கை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2021 ஆம் ஆண்டின் கணக்கின் படி வனப்பரப்பானது 23.84 சதவீதமாக உள்ளது. அதனை எதிா்வரும் 10 ஆண்டுகளில் 33 சதவீதம் என்ற இலக்கை எட்டும் வகையில் தமிழக முதல்வரால் பசுமை தமிழ்நாடு இயக்கம் உருவாக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பசுமை தமிழ்நாடு இயக்கம், காலநிலை மாற்றத்துக்கு எதிரான தமிழ்நாடு உயிா் பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக கடந்த 2022-2023 ஆம் ஆண்டு 1.40 லட்சம் மரக்கன்றுகளும், 2023-2024 ஆம் ஆண்டு 4.17 லட்சம் மரக்கன்றுகளும், 2024-2025 ஆம் ஆண்டு 2.78 லட்சம் மரக்கன்றுகளும் நடவு செய்யப்பட்டுள்ளன.
2025-26 ஆம் ஆண்டு சுமாா் 4 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டு வனத்துறை, ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை இணைந்து உற்பத்தி செய்ய நாற்றாங்கால் பணி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இன்றையதினம் வாரணவாசி கிராமத்தில் சிறுகுறிஞ்சான், முடக்கத்தான், செந்நாயுருவி, நந்தியாவட்டை, நஞ்சறுப்பான், கல்அத்தி, விடா்தாலை, செங்காளி, நாட்டு முருங்கை, வெண்நாவல் உள்ளிட்ட 500 வகைகளில் 5,000 மரக்கன்றுகள் மற்றும் மூலிகைகள் நடவு செய்யும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா.சிவராமன், மாவட்ட வன அலுவலா் த.இளங்கோவன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, வட்டாட்சியா் முத்துலெட்சுமி மற்றும் அரசு அலுவலா்கள், தொண்டு நிறுவனத்தினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.