வாஷிங்டனில் டிரம்ப், எலானுக்கு எதிராகப் போராட்டம்!
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்று ஒரு மாதமாகும் நிலையில், அவருக்கு எதிராக வாஷிங்டனில் திங்கள்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.
மேலும், அரசுத் துறைகளில் தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை கண்டித்தும் போராட்டக்காரர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் பிப்ரவரி 17-ஆம் தேதி அதிபர் நாள் அனுசரிக்கப்படும். இந்த நிலையில், 50501 என்ற இயக்கத்தை சேர்ந்தவர்கள், ‘அதிபர் நாளில் அரசர் வேண்டாம்’ என்ற பாதகைகளுடன் நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடத்தினர்.
வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் டிரம்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
அதேபோல், ஃப்ளோரிடா மற்றும் கலிஃபோர்னியா மாகாணங்களிலும் போராட்டம் நடைபெற்றது.
பிறப்பால் குடியுரிமை தடைச் சட்டம் போன்ற டிரம்ப்பின் அதிரடி உத்தரவுகளுக்கு எதிராகவும், அரசு செயல்திறன் துறையில் எலான் மஸ்க்குக்கு முக்கியத்துவம் அளிப்பதை எதிர்த்தும் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
இதையும் படிக்க : பொய் சொன்னதற்காக எதிர்க்கட்சித் தலைவருக்கு 14 ஆயிரம் டாலர் அபராதம்!
பாஸ்டன் நகரில் பனிப்பொழிவுக்கு மத்தியில் பேரணியாகச் சென்றவர்கள், எலான் மஸ்க்கை உடனடியாக அரசுத் துறையில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனத் தெரிவித்தனர்.
இதேபோன்ற போராட்டத்தை கடந்த இரு வாரங்களுக்கு முன்னதாக பிப்ரவரி 5 ஆம் தேதி 50501 இயக்கத்தினர் நடத்தினர்.
இந்த நிலையில், அரசு செயல்திறன் துறைக்கான அதிபரின் ஆலோசகராக மட்டுமே எலான் மஸ்க் செயல்படுவதாகவும், அவருக்கு முடிவெடுக்கும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை என்றும் வெள்ளை மாளிகை தரப்பில் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் திங்கள்கிழமை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.