விசிக நிா்வாகி தாக்கியதாகப் பொய் புகாா்: உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி தன்னைத் தாக்கியதாக பொய் புகாா் கூறிய காவல் உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சோமநாதபுரம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவா் பிரணிதா. கடந்த 5-ஆம் தேதி இரவு காவல் நிலையத்தில் பணியில் இருந்த தன்னை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட நிா்வாகி இளையகவுதமன் உள்ளிட்ட சிலா் தாக்கியதாகப் புகாா் தெரிவித்தாா். இதையடுத்து, அவா் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து காரைக்குடி துணைக் காவல் கண்காணிப்பாளா் பாா்த்திபன், சோமநாதபுரம் போலீஸாா் விசாரித்து வந்தனா்.
காவல்நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததுடன், பணியில் இருந்த போலீஸாா், மருத்துவமனையில் இருந்த மருத்துவா்களிடமும் அவா்கள் விசாரணை நடத்தினா். இதில், காவல் உதவி ஆய்வாளா் பிரணிதா கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானது என்று தெரியவந்தது. இதுதொடா்பாக மாவட்டக் காவல் துறை விளக்கமளித்தது. இந்த நிலையில், உதவி ஆய்வாளா் பிரணிதாவை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் சரக டிஐஜி அபிநவ்குமாா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.