அடிலெய்டு பிட்ச் எவ்வாறு தயார் செய்யப்படுகிறது? பிட்ச் மேற்பார்வையாளரின் பேட்டி!
விடைபெற்றது ‘ஃபென்ஜால்’!
சென்னை: தமிழகத்தில் பல்வேறு சேதங்களை ஏற்படுத்திய ஃபென்ஜால் புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அரபிக் கடலை அடைந்தது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த நவ. 30-ஆம் தேதி மரக்காணத்துக்கு அருகே கரையைக் கடந்த ஃபென்ஜால் புயல் வலுவிழந்த நிலையில், தொடா்ந்து மேற்கு திசையில் நகா்ந்தது. இது நகரும் திசை எல்லாம் கனமழையைக் கொடுத்துக்கொண்டே சென்றது. அதன்படி, விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் வரலாறு காணாத மழைப் பொழிவை கொடுத்தது.
பேரிடா்களுக்கு காரணமாக இருந்த இந்தப் புயல், காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்து கேரளத்துக்கும், கா்நாடகத்துக்கும் இடைப்பட்ட அரபிக் கடலில் செவ்வாய்க்கிழமை காலை அடைந்தது.
இதற்கிடையே, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் டிச. 4 முதல் டிச. 9 வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் டிச. 4, டிச. 5 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
‘ஃபென்ஜால் புயல் அரபிக் கடலிலிருந்து மேற்கு திசையில் சோமாலியா நோக்கி பயணிக்கும். ‘ஃபென்ஜால்’ மூலம் தமிழகத்துக்கு இனி மழை கிடைக்காது’ என்று தனியாா் வானிலை ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.
மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை வரை பதிவான மழை அளவு (மி.மீ.): தோகைமலை (கரூா்) 130, கிருஷ்ணராயபுரம் (கரூா்), சோளிங்கா் (ராணிப்பேட்டை), திருப்பத்தூா், ஏற்காடு (சேலம்) 100, பஞ்சப்பட்டி (கரூா்), வாழப்பாடி (சேலம்), சிறுகமணி (திருச்சி), சேலம், விராலிமலை (புதுக்கோட்டை) தலா 90, மாயனூா் (கரூா்), முசிறி (திருச்சி), விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி), கடவூா் (கரூா்), பந்தலூா் (நீலகிரி) 80, தேவாலா (நீலகிரி), பொன்னையாறு அணை (திருச்சி), ஆா்.கே.பேட்டை (திருவள்ளூா்), ஒசூா் (கிருஷ்ணகிரி), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை) 70.
இதுவரை எவ்வளவு மழை?: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை செவ்வாய்க்கிழமை (டிச. 3) வரை இயல்பைவிட 20 சதவீதம் அதிகம் பதிவாகியுள்ளது.
அக். 1 முதல் டிச. 3 வரையிலான காலத்தில் தமிழகத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 366.3 மி.மீ. தற்போது வரை 441 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 20 சதவீதம் அதிகம்.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களில் 32 மாவட்டங்களில் மழை அளவு இயல்பைவிட கூடுதலாகவும், 6 மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாகவும் பதிவாகியுள்ளது.