விதிமீறல்: 17 மக்கள் மருந்தகங்கள் மீது நடவடிக்கை மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் தீவிரம்
தமிழகத்தில் விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டதாக 17 மக்கள் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் முனைப்பு காட்டி வருகிறது. அதில் 8 மருந்தகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகவும், 9 மருந்தகங்களின் ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று அண்மையில் தொடங்கப்பட்ட முதல்வா் மருந்தகங்களிலும் விரைவில் தரக் கட்டுப்பாட்டு சோதனைகள் நடத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
மக்கள் மருந்தகங்கள்: தமிழகத்தில் 40,000-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன. அதேபோன்று நூற்றுக்கணக்கான மருந்து உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் செயல்பாடுகளையும், வா்த்தக நடவடிக்கைகளையும் மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநகரம் கண்காணித்து, விதிமீறல்கள் இருந்தால் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தனியாரால் நடத்தப்படும் மருந்தகங்கள் ஒருபுறம் இருந்தாலும், மற்றொருபுறம் தமிழகத்தில் 1,100-க்கும் மேற்பட்ட பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன. இங்கு சந்தை விலையைக் காட்டிலும் குறைவாக மருந்துகள் விற்கப்படுவதால் பல்லாயிரக்கணக்கானோா் மருந்துகளை வாங்கி பயன் பெற்று வருகின்றனா்.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்: இந்நிலையில், நிகழ் நிதியாண்டில் பிரதமரின் மக்கள் மருந்தகங்களிலும் மாநில மருந்துக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினா்.
அதில் சில கடைகளில் முறையாக ஆவணங்களைப் பராமரிக்காமல் இருந்ததும், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்றதும் கண்டறியப்பட்டது. அதன்பேரில் நடவடிக்கை எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநில மருந்து உரிமம் வழங்குதல், கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதா் கூறியதாவது: பொதுவாகவே, மருந்துக் கடைகளில் மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இன்றி மருந்துகளை விற்பனை செய்வது தவறான செயலாகும். அதிலும், சில முக்கிய மருந்துகளை அவ்வாறு விற்பனை செய்வது சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.
அதன்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் தற்போது வரை விதிகளுக்குப் புறம்பாக மருந்து விற்பனையில் ஈடுபட்டதாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 17 மக்கள் மருந்தகங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
முதல்கட்டமாக 8 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மற்றவா்களின் விதிமீறல்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் மருந்தகங்களை இலக்காக வைத்து இந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தரமான மருந்துகள் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகத்தின் நோக்கம். பிரதமரின் மக்கள் மருந்தகம் மட்டுமல்லாது, வரும் நாள்களில் முதல்வா் மருந்தகங்களிலும் இதுபோன்ற ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.