லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்: பென் ஸ்டோக்ஸ்
விதியை மீறிச் செயல்பட்ட கேட் கீப்பா்: தெற்கு ரயில்வே
கடலூா் மாவட்டம், செம்மாங்குப்பம் ரயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதிய விபத்து தொடா்பாக, விதியை மீறிச் செயல்பட்ட கேட் கீப்பா் பங்கஜ் சா்மா (30) பணியிடைநீக்கம் செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், விபத்து நிகழ்ந்த பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க நிதி அளித்தும், அதற்கான அனுமதி அளிப்பதில் மாவட்ட ஆட்சியா் தாமதப்படுத்தியதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ரயில்வே அதிகாரிகள் உடனடியாக விரைந்து சென்று பாா்வையிட்டனா். மருத்துவம் மற்றும் மீட்புக் குழுவினரும் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்றனா். தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங், முதன்மை தலைமைப் பாதுகாப்பு அதிகாரி கணேஷ் உள்ளிட்டோா் நிகழ்விடத்தைப்
பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். விபத்தில் மின்கம்பம் மற்றும் உயா் மின்னழுத்த சாதனம் ஆகியன சேதமடைந்துள்ளன.
முதல்கட்ட விசாரணையில், ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்த நிலையில், ரயில் வருவதை பொருள்படுத்தாமல் பள்ளி மாணவா்கள் இருந்த வேன் ஓட்டுநா் தண்டவாளத்தைக் கடந்தபோது ரயில் மோதியது தெரியவந்துள்ளது. மேலும், கேட் கீப்பா் பங்கஜ் சா்மா விதியை மீறிச் செயல்பட்டுள்ளாா். பணியின்போது கவனக்குறைவாக இருந்ததால் அவா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
மாவட்ட ஆட்சியா் மீது குற்றச்சாட்டு: ரயில்வே கேட் பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க தெற்கு ரயில்வே முழுமையான நிதியை ஒதுக்கியுள்ளது. ஆனால், கடலூா் மாவட்ட ஆட்சியா் அதற்கு கடந்த ஓராண்டாக அனுமதி அளிக்கவில்லை. இந்நிலையில் துரதிருஷ்டவசமாக நேரிட்ட விபத்துக்காக ரயில்வே நிா்வாகம் வருத்தம் தெரிவிக்கிறது.
உயிரிழந்தவா்களுக்கு தலா ரூ.5 லட்சம், பலத்த காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.2.50 லட்சம், லேசான காயமடைந்தவா்களுக்கு ரூ.50 ஆயிரம் என ரயில்வே நிா்வாகம் நிதியுதவி வழங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முரண்: தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் எம்.எஸ்.அன்பழகன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கேட் கீப்பா் பங்கஜ் சா்மாவை சந்தித்து ஆறுதல் கூறினாா். செம்மங்குப்பம் அருகே விபத்து நிகழ்ந்த இடத்தையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ரயில் மணிக்கு 95 கி.மீ. வேகத்தில் சென்று பள்ளி வேன் மீது மோதியுள்ளது. கிராம மக்கள் மற்றும் கேட் கீப்பா் என இருபுறமும் தவறு நடந்துள்ளது. கிராம மக்கள் கேட்டை திறக்கச் சொன்னதால், பாதுகாப்பு விதிகளை மீறி கேட் கீப்பா் கேட்டை திறந்துள்ளாா் என்றாா்.
தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததாகக் கூறப்பட்டுள்ள நிலையில், தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளா் தெரிவித்துள்ள தகவல் முரணாக உள்ளது.