பிகார்: ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவுக்கு பிரசாந்த் கிஷோா் அழைப்பு!
விமானப்பணிப்பெண்; செளந்தர்யாவின் ரசிகை; மகனின் சினிமா ஆசை - நடிகை சுவாதி பர்சனல்ஸ்
தமிழ் சினிமா நிறைய நாயகிகளைப் பார்த்திருக்கு. குறிப்பா, 90-கள்ல. சிறகில்லாத தேவதைகளா ஜொலிச்ச அந்த நாயகிகளைப் பத்தி தெரியாத பர்சனல் விஷயங்களை உங்களுக்குத் தெரியப்படுத்துறதுதான் இந்த எவர்கிரீன் நாயகிகள் சீரிஸ். இந்த வாரம், நடிகை சுவாதி.
''என்னோட ஆசை, லட்சியம் எல்லாமே படிச்சு முடிச்சிட்டு ஒரு விமானப் பணிப்பெண்ணா ஆகணும்கிறதுதான். ஆனா, நான் பத்தாவது படிச்சிட்டிருந்தப்போ எதிர்பாராத விதமா தமிழ் சினிமாவுல நடிக்க வாய்ப்பு வந்துச்சு. படிப்பை விடமுடியாதுன்னு தீர்மானமா இருந்ததால, சம்மர் ஹாலிடேஸ்ல அந்தப்படம் நடிச்சுக் கொடுத்தேன். அதுக்கப்புறம் நிறைய பட வாய்ப்புகள் வந்துச்சு. அதுல எனக்குப் பிடிச்ச கேரக்டர்ஸ்ல மட்டும் நடிச்சேன். அதுக்கப்புறம் கல்யாணம், குழந்தைன்னு செட்டில் ஆகிட்டேன். ஆனா, நான் நடிச்ச காலகட்டத்துல நான் நடிக்க ஆசைப்பட்ட கேரக்டர்ஸ் எனக்கு கிடைக்கவே இல்ல. மணிரத்னம் மாதிரி சில டைரக்டர்ஸோட வொர்க் பண்ணணும்னு ஆசைப்பட்டேன். அதுவும் கிடைக்கல. ஆனா, என்ன கிடைச்சுதோ அதுல ஹேப்பியா நடிச்சுக் கொடுத்தேன்''னு ரொம்ப வெளிப்படையா ஓர் இன்டர்வியூவுல பேசியிருக்கார் சுவாதி.
சுவாதி ஹைதராபாத்துல பிறந்தவர். ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தப்போ சில வெளிநாட்டு மொழிகள் கத்துக்கிட்டிருந்திருக்கார். காரணம், அவரோட விமானப் பணிப்பெண் கனவு. கூடவே சில மாடலிங் வாய்ப்பும் வந்திருக்கு. சுவாதிக்கு கிளாசிக் டான்ஸும் தெரியும். படிப்பு, டான்ஸ், டைம் கிடைச்சா மாடலிங்னு ஜாலியா இருந்திருக்கார். அந்த மாடலிங் போட்டோஸை பார்த்துதான் விஜய்கூட நடிக்கிற வாய்ப்பு 1995-ல சுவாதியைத் தேடி வந்திருக்கு.படிப்பை விட்டுட்டு நடிக்கிறதான்னு யோசிச்சவரை கன்வின்ஸ் செஞ்சுதான் டென்த் சம்மர் ஹாலிடேஸ்ல நடிக்க வெச்சிருக்காங்க.
''டைரக்டரோட பையன் தான் ஹீரோன்னு சொன்னாங்க. அந்த ஹீரோதான் விஜய். அந்த படத்தோட பேர் 'தேவா'. முதல் படத்துல பாவாடை தாவணின்னு ரொம்ப ஹோம்லியான கேரக்டர். அப்போ தான் முதல் தடவையா நான் பாவாடை தாவணி போட்டேன்கிறதால, அப்பப்போ கால் தடுக்கி ஷூட்டிங் ஸ்பாட்ல ஒரே காமெடியா இருந்துச்சு. அடுத்த படமான 'வசந்த வாசலும்' விஜய்கூடதான் நடிச்சேன். மூணாவது படம் 'வான்மதி'. திமிர் பிடிச்ச மாடர்ன் கேர்ள் கேரக்டர். இந்தப் பட சான்ஸ் கிடைச்சதுக்கு பின்னாடி ஓர் இன்ட்ரஸ்டிங்கான கதையிருக்கு. ஒருமுறை நான் ஏர்போர்ட்ல கார்ல ஏறும்போது டைரக்டர் அகத்தியன் சார் என்னைப் பார்த்திருக்கார். அவரோட அடுத்தப் படமான 'வான்மதி'யில என்னை அறிமுகம் செய்யலாம்னு அப்ரோச் செஞ்சார். அதுக்கப்புறம்தான் நான் ஏற்கெனவே ரெண்டு தமிழ்ப்படங்கள்ல நடிச்சிருக்கிறதை சொன்னேன். அந்த நேரத்துல அஜீத்தோட 'ஆசை' படம்கூட ரிலீஸாகல. அதனால, அஜீத்கூட நடிக்க வேணாம்னு சிலர் அட்வைஸ் பண்ணாங்க. ஆனா, எனக்கு 'வான்மதி' படத்தோட கதை ரொம்ப பிடிச்சிருந்தால நடிச்சேன். தவிர, நடிக்க ஆரம்பிச்ச மூணாவது படத்தோட டைட்டில் ரோலே நான்தாங்கிறது பயங்கர ஹேப்பியா இருந்துச்சு. படம் ரிலீஸாச்சு. நான் வெச்சிருந்த பொட்டையெல்லாம் பாராட்டி எனக்கு லெட்டர் எழுதுனாங்க தெரியுமா''னு மகிழ்ச்சியா அந்த நாள்களை நினைவுகூர்கிறார் சுவாதி.
வான்மதியோட வெற்றிக்குப்பிறகு 'செல்வா'வுல மறுபடியும் விஜய்யோட நாயகியானார் சுவாதி. இந்த முறையும் ஹோம்லி கேரக்டர்தான். விஜய்யை மனசுக்குள்ளேயே காதலிக்கிற கேரக்டர் இந்தப்படத்துல சுவாதிக்கு. அந்த கேரக்டர்ல ரொம்ப இயல்பா நடிச்சிருப்பாங்க சுவாதி. அடுத்தப்படம் பிரபுவுடன் 'மாப்பிள்ளைக் கவுண்டர்.' பிரபுவை ஒன் சைடாக காதலிக்கிற சோகமாக கிராமத்துப்பொண்ணு கேரக்டர். வான்மதியில நடிச்ச மாடர்ன் பொண்ணா இவங்கன்னு ஆச்சரியப்படுற அளவுக்கு புடவை, எண்ணெய் வெச்சு படிய வாரின ஹேர்ஸ்டைல்னு ஸ்கோர் பண்ணியிருப்பாங்க. அடுத்து அஜீத்துடன் 'உன்னைத்தேடி', சரவணனுடன் 'விஸ்வநாத்', ராமராஜனுடன் 'அண்ணன்', 'துள்ளித்திரிந்த காலம்' படத்துல ஸ்பெஷல் அப்பியரன்ஸ், ஹவுஸ்ஃபுல், தென்றல்னு தனக்குப்பிடிச்ச ரோல்கள்ல தன்னோட பெஸ்ட்டை கொடுத்திட்டே இருந்தாங்க சுவாதி. 'கிளாமர், ஹோம்லினு எல்லாம் நான் பார்க்க மாட்டேன். என்னோட கேரக்டர் பிடிச்சிருந்தா ஓ.கே சொல்லிடுவேன்'னு தன்னோட இன்டர்வியூ ஒண்ணுல சுவாதி சொல்லியிருப்பார். அவர் சொன்னது உண்மைதாங்கிறது அவரோட படங்களைப் பார்த்தாலே தெரிஞ்சுடும். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தின்னு 1995-ல ஆரம்பிச்சு 2009 வரைக்கும் தனக்குப்பிடிச்ச கேரக்டர்கள்ல நடிச்ச சுவாதியோட கடைசிப்படம் அமீரோட `யோகி'. அந்தப்படத்துல தன் குழந்தையைத் தொலைச்சிட்டு, அந்தக் குழந்தையை காப்பாத்த கொலையும் செய்யுற அளவுக்குப்போற அம்மா கேரக்டர்ல மிரட்டியிருப்பாங்க சுவாதி.
ஹீரோயின்கள், 'எனக்கு இந்த ஹீரோவை ரொம்ப பிடிக்கும், அந்த ஹீரோவை ரொம்ப பிடிக்கும்னுதானே பொதுவா சொல்வாங்க. சுவாதி இதுல ரொம்பவே வித்தியாசமானவங்க. சுவாதிக்கு காலம்சென்ற நடிகை செளந்தர்யாவை ரொம்ப பிடிக்குமாம். அதுவும் எந்தளவுக்குப் பிடிக்கும்கிறதை அவங்களே ஓர் இன்டர்வியூவுல சொல்லியிருக்காங்க.
''என்னோட கரியர்ல ரொம்ப முக்கியமான படம் விஜயகாந்த் சார்கூட நடிச்ச 'சொக்கத்தங்கம்.' பிரேமலதா மேம் தான் என்னோட ஜுவல்லரி விளம்பரம் ஒண்ணைப் பார்த்துட்டு, அந்தப் படத்துல என்னை ரெகமென்ட் பண்ணியிருக்காங்க. எனக்கு ஆஃபர் வந்தப்போ, பெரிய பேனர், விஜயகாந்த் சார் ஹீரோ, பாக்யராஜ் சார் டைரக்ஷன்னு நிறைய பிளஸ் இருந்தாலும் 'கெஸ்ட் ரோலா'ன்னு ரொம்பவே தயங்கினேன். ஆனா, அதெல்லாம் அந்தப்படத்துல செளந்தர்யா மேடம் நடிக்கிறாங்கன்னு தெரியுறவரைக்கும்தான். தெரிஞ்ச அடுத்த நிமிஷமே ஓகே சொல்லிட்டேன். அந்தப்படத்தோட ஷூட்டிங்ல செளந்தர்யா மேடம் கூடவே இருக்கலாம்கிற ஒரே காரணத்துக்காகவே அந்த கெஸ்ட் ரோல்ல நடிக்க யெஸ் சொன்னேன். அந்தப் படத்தோட ஷூட்டிங் அப்போ செளந்தர்யா மேடம் பேசறதை, நடிக்கிறதை, மேக்கப் போடுறதை ஒரு ரசிகையா வேடிக்கை பார்த்துட்டே இருந்தேன். அவங்களும் என்மேல ரொம்ப அக்கறையா இருந்தாங்க''ன்னு ஃபேன் மோடில் சிலிர்க்கிறார் சுவாதி.
நடிப்புக்கு அப்புறம் சில தெலுங்கு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிக்கிட்டிருந்த சுவாதி, தொழிலதிபர் கிரணைத் திருமணம் செஞ்சுக்கிட்டு ஹைதராபாத்ல செட்டிலாகிட்டார். இந்தத் தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை இருக்கிறார். ''என் பையன் என்னை மறுபடியும் படங்கள்ல நடிக்க சொல்றான். என்னை எதிர்பார்க்காம நீயே நல்லா படிக்க ஆரம்பிச்சன்னா அம்மா மறுபடியும் நடிக்கப்போறேன்னு சொல்லியிருக்கேன். சாவித்திரி அம்மா, அஞ்சலி தேவி அம்மால்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான் நிறைய சக்சஸ் கொடுத்தாங்க. இப்போ இந்தியில அலியா பட், கரீனா கபூர்கூட கல்யாணத்துக்கு அப்புறமும் நல்ல நல்ல ரோல் பண்ணிக்கிட்டுதான் இருக்காங்க. ஸோ, நல்ல வாய்ப்புகள் வந்தா இப்பவும் நான் நடிக்க ரெடியா இருக்கேன். அதுலேயும் தமிழ் வெப் சீரிஸ்ல நடிக்க ரொம்ப ஆர்வமா இருக்கேன்''னு ஆக்டிங் மேல இப்பவும் தனக்கிருக்கிற விருப்பத்தைச் சொல்ற சுவாதி, ''தெலுங்கு பொண்ணா இருந்தாலும் தமிழ் சினிமா தான் என்னை நடிகையாக்குச்சு. தமிழ் ரசிகர்கள் என்னை தேவதை மாதிரி ட்ரீட் பண்ணாங்க. மேக்கப்பே போடாம சென்னைக்கு வந்தாலும் 'நீங்க சுவாதி தானே'ன்னு கண்டுபிடிச்சிடுறாங்க. எனக்கு அப்புறம் எத்தனையோ நடிகைகள் வந்துட்டாங்க. இத்தனை வருஷம் கழிச்சு நம்மளை யார் கண்டுபிடிச்சிடப்போறான்னு நினைச்சேன். ஆனா, இப்பவும் தமிழ் ரசிகர்கள் என்னை மறக்கல. அவங்களுக்காகவே மறுபடியும் நடிக்க வரணும்''னு எதிர்ப்பார்ப்போட சொல்றார் சுவாதி.
வெல்கம் வான்மதி!
(நாயகிகள் வருவார்கள்)
VIKATAN AUDIO STORIES
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...