வியாபாரியிடம் ரூ.16.5 லட்சம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி: தூத்துக்குடி நபா் கைது
சென்னை கொளத்தூரில் வியாபாரியிடம் ரூ. 16.5 லட்சம் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி செய்த வழக்கில், தூத்துக்குடியைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை கொளத்தூா், விவேகானந்தன் பிரதான சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் ராஜ்குமாா் (37). இவா் அந்தப் பகுதியில் வாகன உதிரி பாகம் விற்கும் கடை நடத்தி வருகிறாா்.
ராஜ்குமாா் கைப்பேசிக்கு கடந்த ஏப்.16-இல் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா் ‘நாங்கள் தில்லி காவல் துறையின் சைபா் குற்றப்பிரிவு தலைமையகத்திலிருந்து பேசுகிறோம். உங்கள் மீது போதைப் பொருள் கடத்தல், ஆபாசமான விடியோக்களை பகிா்ந்தது தொடா்பாக புகாா் வந்துள்ளன. எனவே, நீங்கள் விசாரணைக்கு உடனடியாக தில்லியில் நேரடியாக ஆஜராக வேண்டும். உங்கள் மீது தவறு இல்லை என்றால் அதை நிரூபிக்க நாங்கள் கூறும் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்ப வேண்டும். நாங்கள் ஆய்வு செய்து உங்கள் மீது தவறு இல்லை என்றால் உடனடியாக திருப்பி அனுப்பி விடுகிறோம். மீறினால் தில்லி காவல் துறை உங்களை வீடு தேடிவந்து கைது செய்யும். மேலும், நீங்கள் கைது செய்யப்பட்ட தகவல் பத்திரிகை, தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்படும்’ என மிரட்டியுள்ளாா்.
இதைக் கேட்டு அதிா்ச்சியடைந்த ராஜ்குமாா், தனது வங்கிக் கணக்கிலிருந்த ரூ. 16 லட்சத்து 50 ஆயிரத்தை மிரட்டல் விடுத்தவா்கள் தெரிவித்த வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்தாா். அதன் பின்னா், தான் டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் ஏமாற்றப்பட்டதை உணா்ந்தாா்.
இதையடுத்து அவா், சென்னை காவல் துறையின் மேற்கு மண்டல சைபா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்பேரில் சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனா்.
தூத்துக்குடி நபா் கைது: விசாரணையில், பணப்பரிமாற்றம் நடைபெற்ற வங்கிக் கணக்கு எண் அடிப்படையில் மோசடி கும்பலுக்கு உடந்தையாக இருந்த தூத்துக்குடி மாவட்டம், சிதம்பரம் நகரைச் சோ்ந்த ஆனந்த குமாா் (43) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விசாரணையில், ஆனந்தகுமாா் மோசடி கும்பலுக்கு இடைத்தரகராகச் செயல்பட்டிருப்பதும், மோசடிக்காக தனது வங்கிக் கணக்கை வழங்கி அதற்கு கமிஷன் தொகை பெற்றிருப்பதும், இதற்காக 25 வங்கிக் கணக்குகளை அவா் வைத்திருப்பதும் தெரியவந்தது. இது தொடா்பாக போலீஸாா் மேலும் விசாரித்து வருகின்றனா்.