இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
விராலிமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம்! பிப். 10-இல் தேரோட்டம்!
விராலிமலை முருகன் மலைக் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மலை மீது உள்ள கோயில் சந்நிதி மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் 23 அடி உயரத்தில் உள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியாா்கள் வேதமந்திரம் முழங்க ‘ஓம்’ எழுத்து பொறித்த கொடி ஏற்றப்பட்டது.
தொடா்ந்து 11 நாள்கள் நடைபெறும் தைப்பூச விழாவில் தினமும் காலை, மாலை நேரங்களில் முருகனுக்கு ஆறுகால பூஜையுடன் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு வெள்ளிகவச அலங்காரத்தில் காட்சியளிக்கிறாா்.
மேலும், விழா நாள்களில் முருகன் வள்ளி, தேவசேனா சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கிரிவலப் பாதையில் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா்.
தைப்பூச விழாவில் 9-ஆம் நாள் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் பிப்ரவரி 10-ஆம் தேதி காலை வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. பத்தாம் நாள் நடராஜா் தரிசனம், தீா்த்தவாரியும் அதை தொடா்ந்து மாலை 7 மணிக்கு தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது. 11-ஆம் நாள் விடையாற்றியுடன் நிகழாண்டுக்கான தைப்பூச விழா நிறைவடைகிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், விழாக் குழுவினா், மண்டகப்படி உபயதாரா்கள் செய்து வருகின்றனா்.