சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி தகவல்
விரிவான அலசல்: கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் ஏன்? - கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு
விடுதலை இந்தியாவின் அரசு எவ்வாறு அமைய வேண்டும் என்று விவாதித்து முடிவு மேற்கொண்ட இந்திய அரசு அமைப்பு நிர்ணய சபை (Constituent Assembly), பல்வேறு மொழிவாரி தேசிய இனங்களைக் கொண்ட இந்தியத் துணைக்கண்டத்தின் பன்மைத்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் மாநிலங்களும் அதன் ஒன்றியமாக இந்திய அரசும் இருக்கும் என்று தீர்மானித்தது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறு ஒன்று மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா (Article 1 states "India, that is Bharat, shall be a Union of States) என்று கூறுகிறது.
மாநிலங்களின் ஒன்றியமே இந்தியா என்பதில் எந்த ஐயப்பாடும் ஏற்பட வாய்ப்பே தராமல், மிகத் தெளிவாக மாநில அரசு, ஒன்றிய அரசு என்ற இரண்டு அரசுகள் அமையப் பெற்ற கூட்டாட்சிதான் இந்தியா என்பதை இந்திய அரசமைப்புச் சட்டம் விளக்கி உள்ளதை உணரலாம்.
கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வைக் கூறு 246ன் கீழ் உருவாக்கப்பட்ட அட்டவணை ஏழு தெளிவுபட விளக்குகிறது.
அதிகாரப் பகிர்வு துறைகளின் எண்ணிக்கை அடிப்படையில் அமையவில்லை. புவிசார் அரசியல் மற்றும் சமூகக் காரணிகள் (geopolitical and social factors) ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே அதிகாரப் பகிர்வு அமைந்துள்ளது.
எந்தெந்தத் துறைகள் எந்தெந்த அரசுகளிடம் இருக்கவேண்டும் என்று முடிவு செய்யும்போது, விரிந்த பரப்பைக் கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் நில அமைப்பு, கால நிலை, அதன் அடிப்படையில் நிகழும் உற்பத்தி, அதன் விளைவாக இடத்திற்கு இடம் மக்களின் பழக்க வழக்கங்கள் வேறுபடும், ஒரு நிலப்பரப்பின் பண்பாடு மற்ற நிலப்பரப்பின் பண்பாட்டுடன் மாறுபடும்.
பன்மைத்துவத்துவம் வாய்ந்த பண்பாட்டு சூழல் இந்திய துணைக்கண்டத்தில் அமைந்துள்ளதால் அதிகாரப் பகிர்வும் அதன் அடிப்படையிலேயே உருவாகியுள்ளது.

எந்தத் துறையெல்லாம் பண்பாட்டு கூறுகளை உள்ளடக்கியதோ, எந்த துறையெல்லாம் மக்களின் உடனடி தேவைகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு உள்ளடக்கியதோ அந்தத் துறைகள் எல்லாம் மாநில அரசுகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
அந்த வகையில், கல்வி, மொழி ஆகியவை பண்பாட்டின் கூறுகள். கற்றல் முறை பண்பாட்டிற்கு பண்பாடு மாறுபடும். பாடம் ஒன்றுதான் என்றாலும் கற்றல் முறை மாறுபடும்.
இவற்றை உணர்ந்து கல்வி மாநிலப் பட்டியலில் இடம் பெற்றது. பண்பாட்டின் கூறாக மட்டுமல்லாமல், கண்ணியமிக்க வாழ்க்கைக்கான உடனடி அடிப்படைத் தேவைகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது கல்வி என்பதையும் கருத்தில் எடுத்தே கல்வி மாநிலப் பட்டியலில் இடம் பெற்றது.
மாநிலப் பட்டியலில் கல்வி இடம் பெற்றிருந்த அதே வேளையில் உயர் கல்வி மற்றும் உயர் ஆய்வில் தரத்தை தீர்மானித்து ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஒன்றிய அரசிடம் வழங்கப்பட்டது.
பல்வேறு மாநிலங்களில் உருவாகியுள்ள உயர் கல்வி நிறுவனங்களுக்கிடையே ஒரு ஒருங்கிணைப்பைப் பரிந்துரைக்கும் பொறுப்பு மட்டுமே அரசமைப்புச் சட்டத்தால் ஒன்றிய அரசிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்தைப் புரிந்துக் கொள்ளாமல் பல்வேறு நடவடிக்கைகளை ஒன்றிய அரசு கடந்த அறுபது ஆண்டுகளாக மேற்கொண்டு வந்ததின் விளைவு, படிப்படியாக உயர் கல்வியை ஒன்றிய அரசின் முழுக் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு செல்லும் சூழ்ச்சிகள் இன்று அதிக வேகத்தில் நிகழ்ந்து வருகின்றது.
மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி, 42வது சட்டத் திருத்தத்தின் மூலம் ஒப்பிசைவுப் பட்டியலுக்குத்தான் நகர்த்தப்பட்டது. (Concurrent List), ஒன்றிய அரசின் பட்டியலுக்கு இல்லை என்பதை உணர வேண்டும்.
மூன்றாவது பட்டியல், அதாவது ஒப்பிசைவுப் பட்டியலின் வரிசை 25ல் கல்வி இடம் பெற்றுள்ளது. பட்டியல் மூன்றில் வரிசை இருபத்தைந்தில் கூறப்பட்டுள்ளதை படித்தால், பட்டியல் ஒன்று வரிசை அறுபத்தியாறுக்கு உட்பட்டது என்று கூறப்பட்டுள்ளதை (subject to Entry 66 of List 1) உணரலாம்.
அதாவது கல்வி ஒப்பிசைவுப் பட்டியலில் இருந்தாலும் உயர் கல்வி, உயர் ஆய்வில் தரத்தைத் தீர்மானித்து ஒருங்கிணைக்கும் பொறுப்பு மட்டுமே ஒன்றிய அரசினுடையது, மற்ற எல்லா பொறுப்பும் மாநில அரசிடமே உள்ளது.

பல்கலைக் கழகங்களை நிர்மாணித்து, ஒழுங்குப்படுத்தி, அதை கலைக்கும் முடிவுகள் மேற்கொள்ளும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு மட்டுமே உள்ளது. இதில் எந்த அதிகாரமும் ஒன்றிய அரசிடம் இல்லை.
ஒன்றிய அரசு அதிகாரத்தைப் பட்டியலிடும் பட்டியல் ஒன்று வரிசை 44 மற்றும் மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பட்டியலிடும் பட்டியல் இரண்டு வரிசை 32 ஆகியவற்றை இணைத்து வாசித்தால் பல்கலைக்கழகம் மாநில அரசு முழு அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதை உணரலாம்.
தரத்தை தீர்மானித்து ஒருங்கிணைப்பிற்கானப் பரிந்துரைகளை வழங்கும் பணியைச் செய்ய வேண்டிய ஒன்றிய அரசு, மாநில அரசின் பல்கலைக் கழகங்களை ஒழுங்குப்படுத்தும் அதிகாரத்தையும் எடுத்துக் கொள்ள முயற்சிப்பது அதிகார எல்லையை மீறும் செயலாகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நோக்கத்திற்கும், அதன் கூறுகளுக்கும் நேரெதிரான நடவடிக்கை.
சிக்கல்கள் உருவாகும் போது அரசமைப்புச் சட்டத்தை முன்வைத்து விவாதிக்க வேண்டிய சட்டமன்றங்களும், நாடாளுமன்றமும் இவற்றை விவாதிப்பதே இல்லை என்பதே மக்களாட்சிக்கு இழைக்கப்படும் மிகப்பெரும் துரோகம்.
மாநில அரசின் உரிமைகள் குறித்த தெளிவு மக்கள் பிரதிநிதிகளில் பெரும்பாலோருக்கு இல்லை என்பது பெரும் வேதனை.
இந்தியா விடுதலை அடைந்து, இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகள் நிறைவுற்றுள்ளது.
இந்த எழுபத்தியைந்து ஆண்டுகளில் அனைவரும் படிக்கின்ற பொதுப் பள்ளிகள், அனைவரும் படிக்கின்ற கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் நிர்மாணித்து, நிர்வகித்து, அதற்கான செலவுகளைச் செய்து வருவது மாநில அரசுகளே.
ஒன்றிய அரசு நிர்மாணித்து நிர்வகிப்பது குறிப்பிட்ட நோக்கத்திற்கான சிறப்பு பள்ளிகள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர் கல்வி நிறுவனங்கள் மட்டுமே.
பெரும் பகுதி மக்களுக்கு கல்வி அந்தந்த மாநில அரசுகளே தங்களின் பொறுப்பில், தங்களின் நிதி வருவாயில் இருந்து வழங்கி வருகின்றன.
மாநில அரசுப் பள்ளிகளில் கல்விக்கான எத்தகையக் கட்டணமுமில்லாமல், பல்வேறு கல்விச் செயல்பிட்டிற்கான செலவுகள் ஏதும் மாணவர்கள் செய்ய வேண்டிய அவசியமில்லாமல் பள்ளிப் படிப்பை முடிக்கும் வாய்ப்புகளை மாநில அரசுகள் உருவாக்கி வைத்துள்ளதால்தான் கல்வியைப் பரவலாக்க முடிந்துள்ளது. அனைவருக்கும் பள்ளிக் கல்வி கிடைக்கும் நிலையை உறுதிப்படுத்த முடிந்துள்ளது.

பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை நிர்மாணித்து, நிர்வகித்து வரும் மாநில அரசுகளுக்கு இனி கல்வித்துறையில் முடிவெடுக்கும் எந்த அதிகாரமும் இல்லை என்று ஒன்றிய அரசுக் கூற முற்பட்டால் அதை சட்ட மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்.
மாநில முதல் அமைச்சர்கள் ஒன்று கூடி கல்வி தளத்தில் இந்திய அரசமைப்பையே சீர் குலைக்கும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு இயற்றி அனுப்பிய இளநிலைப் பட்டப் படிப்பு மருத்துவ மாணவர் சேர்க்கைச் சட்டம் தொடங்கி, பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர் தேடுதல் குழுவை அமைப்பதில் உருவாகியுள்ள சிக்கல் வரை அனைத்தும் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அமைந்த இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விடப்பட்ட சவால். இந்தச் சவாலை எதிர்கொள்ள வேண்டிய விதத்தில் எதிர்கொள்ள மாநில அரசுகள் தவறுவது இந்திய மக்களாட்சிக்கு ஏற்பட்டுள்ள மிகப் பெரும் நெருக்கடி.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இன்றுள்ள கூறுகளின் படிகளில் மாநிலத்திற்கு இருக்கும் உரிமையை மாநில அரசுகள் சரியாக உணர்ந்து அதை பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உண்மை.
கல்வி மாநிலப் பட்டியலில் மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுவாக எழுகிறது.
அரசமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற ஆணவத்தில் இன்று ஒன்றிய அரசில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சி நடந்துக் கொள்கிறது.
இத்தகையச் சூழலில், மாநிலப் பட்டியலில் கல்வி இடம்பெற்றுவிட்டால் மட்டும், ஒன்றிய அரசு அரசமைப்புச் சட்டத்தை மதித்து நடந்துக் கொள்ளுமா? என்ற கேள்வி இயல்பாக எழுகிறது.
மக்களுடன் விவாதம் நடப்பதன் மூலமே மக்களுக்கு கூட்டாட்சி முறைமை முழுமையாக விளங்கும். அத்தகைய விவாதம் மிகவும் அவசியம். அத்தகைய விவாதத்தை அரசியல் கட்சிகள் நடத்த முன் வரவில்லை.
கல்லூரி, பல்கலைக்கழகங்களில் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இந்திய அரசமைப்புச் சட்டம் மாநில அரசுகளுக்கு தந்துள்ள அதிகாரங்கள் குறித்து மாணவர்கள் விவாதம் நடத்த வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையில் மிகுந்த தெளிவு வேண்டும்.
எந்த வித நிபந்தனையும் இல்லாமல் தரத்தைத் தீர்மானிப்பதில் தொடங்கி நிர்வகித்தல் வரை அனைத்து அதிகாரமும் மாநில அரசுக்கு என்ற வகையில் கல்வி மாநிலப் பட்டியலில் இடம் பெற வேண்டும்.

அத்தகைய புரிதல் இல்லாமல், பழையபடியே மாநிலப் பட்டியலில் கல்வி என்றால் மீண்டும் பழைய குழப்பங்கள் நீடிக்கவே செய்யும்.
கல்வி மாநிலப் பட்டியலில் இருந்த காலத்தில்தான் கேரள அரசின் கல்வி மசோதா 1957 குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு, குடியரசு தலைவர் கருத்துக் கோர, உச்ச நீதிமன்றத்தில் பெரும் விவாதத்திற்கு உள்ளானது கேரள கல்வி மசோதா வழக்கு.
இன்றையத் தேவை, இன்றுள்ள அதிகாரத்தை உணர்ந்து மாநில அரசுகள் தங்களின் அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் உருவானவுடன் ஒன்றுகூடிய மாநில முதல் அமைச்சர்கள்; தமிழ்நாடு அரசு இயற்றி அனுப்பிய மருத்துவ இளநிலைப் பட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை மசோதா மூன்றாண்டுகளாக முடங்கிக் கிடப்பதற்கு எதிராக ஏன் ஒன்று கூடவில்லை? தேசியக் கல்வி கொள்கை 2020 மாநில அரசுகளை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், ஒன்றிய அரசின் ஆணைகளை நிறைவேற்றும் முகவர்களாக மாநிலங்களை கருதுகிறதே, இதை எதிர்த்து ஏன் மாநில முதல் அமைச்சர்கள் ஒன்றுகூட வில்லை? என்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இன்று மாநிலத்திடம் உரிமை இல்லாதது போல் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது. அது தவறு. இன்றும் மாநிலத்திற்கு உரிமை உள்ளது.
இருக்கும் உரிமையைக் காக்கும் போராட்டம் நடத்த முன்வருவோம். முழுமையான உரிமைக்கான போராட்டத்தை தொடர்ந்து நிகழ்த்துவோம் என்பதே மக்களாட்சிக்கான இலக்கணம்.