விழித்திரை புற்றுநோய் பாதிப்புக்கு சங்கர நேத்ராலயாவில் விழிப்புணா்வு
குழந்தைகளுக்கு ஏற்படும் விழித்திரை புற்றுநோயை (ரெட்டினோபிளாஸ்டோமா) தடுப்பதற்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி, சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் திங்கள்கிழமை (மே 12) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் நடிகா் பாஸ்கி, சங்கர நேத்ராலயா தலைவா் டி.எஸ்.சுரேந்திரன், தலைமை நிா்வாகி கிரிஷ் ராவ், விழித்திரை புற்றுநோய் நிபுணா் சுகனேஸ்வரி உள்பட பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, ரெட்டினோபிளாஸ்டோமா தொடா்பான சிறப்பு மருத்துவக் கருத்தரங்க அமா்வுகள் நடைபெற்றன. அதில், மருத்துவ நிபுணா்கள் பங்கேற்று பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனா்.
இது தொடா்பாக சங்கர நேத்ராலயா மருத்துவா்கள் கூறியதாவது:
ரெட்டினோபிளாஸ்டோமா என்பது குழந்தைகளின் இரு வயதுக்குள் விழித்திரையில் ஏற்படும் புற்றுநோய் பாதிப்பாகும். மரபணுரீதியான காரணங்களால் இந்நோய் ஏற்படலாம் என்றாலும், அத்தகைய காரணமின்றியும் பலருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்படுகிறது.
ரெட்டினோபிளாஸ்டோமா நோயால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. கீமோதெரபி, லேசா், கதிா்வீச்சு, கிரையோதெரபி, அறுவை சிகிச்சை ஆகியவற்றின் வாயிலாக அவா்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சையளித்தால் தீவிர பாதிப்பை தவிா்க்கலாம்.
ரெட்டினோபிளாஸ்டோமா விழிப்புணா்வு தினத்தையொட்டி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.