உச்சநீதிமன்றம் சூப்பர் நாடாளுமன்றம் போல செயல்படுகிறது: ஜகதீப் தன்கர் காட்டம்
விழுப்புரம் - காட்பாடி ரயில் பகுதியளவில் ரத்து
விழுப்புரம்: வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய யாா்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயில் இரு நாள்களுக்கு பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேலூா் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய யாா்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக, ரயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து ஏப்ரல் 9, 11 ஆகிய தேதிகளில் (புதன், வெள்ளிக்கிழமைகள்) இரவு 7.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயில் (வ.எண்.66026), வேலூா் கண்டோன்மென்ட் - காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், இந்த ரயில் விழுப்புரத்திலிருந்து வேலூா் கண்டோன்மென்ட் வரை இயக்கப்படும்.
சென்னை எழும்பூரிலிருந்து மாலை 6 மணிக்குப் புறப்படும் சென்னை கடற்கரை - திருவண்ணாமலை பயணிகள் ரயில் (வ.எண்.66033) ஏப்ரல் 9, 11 ஆகிய தேதிகளிலும், திருவண்ணாமலையிலிருந்து காலை 4.30 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை - தாம்பரம் பயணிகள் ரயில் (வ.எண். 66034) ஏப்ரல் 10, 12 ஆகிய தேதிகளிலும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.