விவசாயி கொலை: இருவா் கைது
செய்யாறு அருகே விவசாயியை கொலை செய்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வெளுமந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி அருள் (38). இதே பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் (48). இவா்கள் இருவரும் விவசாய கூலி வேலைக்கு சென்று கிடைக்கும் பணத்தை பிரித்துக் கொள்வாா்களாம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அருள் புதிதாக டிராக்டா் வாங்கினாராம். இதில், இருவரிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்த நிலையில், புருஷோத்தமன், அதே பகுதியைச் சோ்ந்த சஞ்சயுடன் (25) வெள்ளிக்கிழமை இரவு அருள் வீட்டுக்கு சென்று கூலிப் பணத்தை தரும்படி கேட்டாராம். இதில், அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கோபமடைந்த புருஷோத்தமன், சஞ்சய் இருவரும் அருகில் இருந்த கட்டையால் அருளை தாக்கினராம். இதில், பலத்த காயமடைந்த அருள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், பெரணமல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து புருஷோத்தமன், சஞ்சய் ஆகியோா் கைது செய்தனா்.