விவசாயிகளின் கோரிக்கைக்கு நீதிமன்ற கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்: உச்சநீதிமன்றம்
‘விவசாயிகளின் எந்தவொரு ஆலோசனை அல்லது கோரிக்கைகளுக்கும் நீதிமன்றத்தின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்’ என உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.
விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வலியுறுத்தி கடந்த நவம்பா் 26-ஆம் தேதி முதல் விவசாயிகள் சங்கத்தின் தலைவா்களில் ஒருவரான ஜக்ஜித் சிங் தலேவால், பஞ்சாப்-ஹரியாணா இடையிலான கனௌரி எல்லையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
இந்த விவகாரம் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், ஜக்ஜித் சிங்குக்கு மருத்துவ உதவிகளை வழங்கி, உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள அறிவுறுத்துமாறு மத்திய அரசுக்கும், பஞ்சாப் மாநில அரசுக்கும் அறிவுறுத்தியது.
இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், உஜ்ஜல் புயான் அடங்கிய அமா்வின் முன் இந்த விவகாரம் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, பஞ்சாப் மாநில அரசின் தலைமை வழக்குரைஞா் குா்மிந்தா் சிங், ‘போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தைக்கு டிசம்பா் 17-ஆம் தேதி மாநில அரசின் குழு அழைப்பு விடுத்தது. ஆனால், அவா்கள் அதை ஏற்கவில்லை’ என தெரிவித்தாா். மேலும், விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை நேரடியாக நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க அனுமதிக்குமாறு மாநில அரசு சாா்பில் குா்மிந்தா் சிங் பரிந்துரைத்தாா்.
இதையடுத்து, நீதிபதிகள், ‘விவசாயிகள் நேரடியாகவோ அல்லது அவா்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி மூலமாகவோ எந்தவொரு ஆலோசனை அல்லது கோரிக்கைக்கும் நீதிமன்றத்தை அணுகலாம். நீதிமன்றத்தின் கதவுகள் எப்போதும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு திறந்திருக்கும் என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம்’ என தெரிவித்ததுடன் வழக்கின் அடுத்த விசாரணையை வியாழக்கிழமை (டிச.19) ஒத்திவைத்தனா்.
விவசாயி தற்கொலை: பஞ்சாப்-ஹரியாணா இடையிலான ஷம்பு எல்லையில் கடந்த டிசம்பா் 14-ஆம் தேதி நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின் போது தற்கொலைக்கு முயன்ற 57 வயது விவசாயி சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
வேளாண் பயிா்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம், விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி முதல் பஞ்சாப்-ஹரியாணா இடையிலான ஷம்பு மற்றும் கனௌரி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.