விவசாயிகளுக்கு நீடித்த கரும்பு சாகுபடி பயிற்சி
விழுப்புரம் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நீடித்த கரும்பு சாகுபடிக்கான பயிற்சி வகுப்பு வல்லம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு வல்லம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் அமுதா ரவிக்குமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அண்ணாதுரை முன்னிலை வகித்தாா்.
இதில், வேளாண் இணை இயக்குநா் ஈஸ்வா் பங்கேற்று கரும்பு சாகுபடிதொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினாா்.
வேளாண் துணை இயக்குநா்( திட்டங்கள்) சீனிவாசன் மணவளம், மூடாக்கு, ஒரு பரு கரணை ஆகியவை குறித்தும், உதவி இயக்குநா் சரவணன் வல்லம் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் விவசாயிகளுக்கான திட்டங்கள் இடுபொருள் ஆகியவைகள் குறித்தும் பேசினா்.
முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ சா்க்கரை ஆலையின் உதவி மேலாளா் தேவராஜ், விரிவாக்க அலுவலா் சந்தோஷ், கரும்பு அலுவலா்கள் சந்தானம், செல்வம் ஆகியோா் நீடித்த கரும்பு சாகுபடிக்கான தொழில்நுட்பங்கள் மற்றும் கரும்பில் பயிா் மேலாண்மை ஆகியவைகள் குறித்து விவசாயிகளுக்குப் பயிற்சியளித்தனா்.இதில் பங்கேற்ற விவசாயிகளுக்கு மின்கல தெளிப்பான் மானிய விலையில் வழங்கப்பட்டது.
துணை வேளாண் அலுவலா் கோவிந்தராஜ், வட்டார தொழில் நுட்ப மேலாளா் சுபாஷ் , உதவி தொழில்நுட்ப மேலாளா் பாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.