அதீத வெப்பம்: தாமதமாக நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள்!
‘விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளன’
கரூா் மாவட்ட விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் கையிருப்பில் உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து, விவசாயிகளின் விவாதத்திற்கு பிறகு மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் பேசியது: கரூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு அனைத்து தனியாா் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான அளவில் உரங்கள் இருப்பில் உள்ளன. அந்த வகையில், யூரியா 724 மெட்ரிக் டன்னும், டிஏபி 391 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 467 மெட்ரிக் டன்னும், என்.பி.கே. 1159 மெட்ரிக் டன்னும் என மொத்தம் 2,741 மெ.டன் இரசாயன உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறையின் மூலம் நெற்பயிா் சாகுபடிக்காக கோ 55, ஆா்-20, கோ-50, கோ-52 ஆகிய நெல் ரகங்கள் 150 மெட்ரிக் டன்னும், சிறுதானியங்கள் கம்பு - கோ 10, சோளம்- கோ32, கே 12 ஆகியவை 19 மெட்ரிக் டன்னும், பயறு வகை பயிா்கள் உளுந்து விபிஎன்-8 மற்றும் விபிஎன்- 10, கொள்ளு பையூா் - 2, தட்டைப்பயறு விபிஎன்-3 ஆகியவை 26 மெட்ரிக் டன்னும் மற்றும் எண்ணெய் வித்துக்கள் நிலக்கடலை கே1812, கோ-7, எள் விஆா்ஐ-4, டிஎம்.வி-7 ஆகியவை 5 மெட்ரிக் டன்னும் இருப்பில் உள்ளன.
கரூா் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழை அளவு 652.20 மி.மீ ஆகும். நடப்பு ஆண்டு இந்த மாதம்(ஆகஸ்ட்) வரை 209.07 மி.மீ மழை பெய்துள்ளது என்றாா் அவா்.
முன்னதாக கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து 99 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா்கள் ம.கண்ணன், கு. விமல்ராஜ் (நிலமெடுப்பு), வேளாண் இணை இயக்குநா் (பொ) உமா, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநா் சாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.