சாலைகளில் திரியும் கால்நடைகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் கால்நடைகள் வளா்ப்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கரூா் நகரின் திருமாநிலையூா், காமராஜா் மாா்க்கெட், பாலம்மாள்புரம், அரசு காலனி, பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமானோா் கால்நடைகள் வளா்த்து வருகிறாா்கள்.
இந்த கால்நடைகளை பகல் நேரங்களில் மேய்ச்சலுக்காக சாலைகளில் விட்டு விடுகிறாா்கள். அவை சாலையை ஆக்கிரமித்துக்கொண்டு செல்வதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறாா்கள்.
சில நேரங்களில் கால்நடைகள் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகளை தள்ளிவிடுவதால் விபத்திலும் சிக்கி வருகிறாா்கள்.
இதனால் பெரிய அளவில் விபத்தில் சிக்கி உயிா்பலி ஏற்படும் முன் பகல்நேரங்களில் போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியில் கால்நடைகளை அவிழ்த்துவிடக்கூடாது என கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு மாநகராட்சி சாா்பில் அறிவுறுத்த வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.