மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: கரூா் மாவட்டத்தில் மேலும் 2,624 மாணவா்கள் பயன்: ஆட்சியா்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டதால் இத்திட்டத்தில் கரூா் மாவட்டத்தில் மேலும் 2,624 மாணவா்கள் பயன்பெறுவா் என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல்.
சென்னையில் நகா்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, கரூா் மாநகராட்சிக்குள்பட்ட புனித தெரசா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் பள்ளி மாணவா்களுடன் அமா்ந்து காலை உணவு அருந்தினாா்.
பின்னா் அவா் கூறுகையில், கரூா் மாவட்டத்தில் ஏற்கெனவே முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 746 அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மூலம் 30 ஆயிரத்து 254 மாணவா்கள் பயன்பெற்று வருகின்றனா்.
இந்நிலையில், கரூா் மாவட்டத்தில் நகா்ப்புற பகுதிகளில் உள்ள 22 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செவ்வாய்க்கிழமை விரிவுப்படுத்தப்பட்டதன் மூலம் மேலும் 2, 624 மாணவா்கள் பயன்பெறுவா்.
எனவே, கரூா் மாவட்டத்தில் இத் திட்டத்தின் மூலம் மொத்தம் 768 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 32 ஆயிரத்து 878 மாணவா்கள் பயன்பெறுவா் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினா் க.சிவகாமசுந்தரி, மாநகராட்சி மேயா் வெ.கவிதா, மாநகராட்சி ஆணையா் கே.எம். சுதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) தேன்மொழி, துணை மேயா் ப.சரவணன், மண்டலக் குழு தலைவா்கள் எஸ்.பி. கனகராஜ், ஆா்.எஸ்.ராஜா, அன்பரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.