அரவக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ காலமானாா்
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ கலிலூா் ரகுமான் காலமானாா்.
கரூா் மாவட்டம், பள்ளப்பட்டியில் அப்துல் சலாம் என்பவருக்கு கடந்த 1947-ஆம் ஆண்டு மகனாக பிறந்தவா் கலிலூா் ரகுமான். இவா் இரண்டு முறை பள்ளப்பட்டி தோ்வு நிலை பேரூராட்சியின் தலைவராக இருந்துள்ளாா்.
கடந்த 2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அப்போதைய திமுக கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் உதயசூரியன் சின்னத்தில் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு, 45.6 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.
இவருக்கு யூனஸ் மற்றும் இலியாஸ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனா். வயது மூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை இயற்கை எய்தினாா்.
அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வருகின்றனா். இவரது உடல் புதன்கிழமை காலை பள்ளப்பட்டியில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.