Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள், ரூ. 2 லட்சம் திருட்டு
பெரம்பலூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது திங்கள்கிழமை தெரியவந்தது.
பெரம்பலூா் அருகேயுள்ள அய்யலூா் குடிக்காட்டைச் சோ்ந்தவா் அருள்முருகன் (33). சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் இவா், கடந்த 23- ஆம் தேதி தனது சொந்த ஊருக்கு வந்துள்ளாா். கடந்த 28-ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவி பவதாரணி, மகன் அருபன் ஆகியோருடன், புதுவேட்டக்குடியில் உள்ள தனது மாமானாா் வீட்டுக்குச் சென்றுள்ளாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை காலை அருள்முருகன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பாா்த்த அவரது உறவினா்கள், கைப்பேசி மூலம் அருள்முருகனுக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 21 பவுன் நகைகள் மற்றும் ரூ. 2 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதேபோல், அய்யலூா் குடிக்காடு பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த அய்யக்கண்ணு மகன் செல்வராஜ் (50), வரகுபாடி பிரதானச் சாலையைப் பகுதியை சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் அழகு (55) ஆகியோரின் வீடுகளிலும் மா்ம நபா்கள் திருடியுள்ளனா். இதில், அழகு என்பவரது வீட்டிலிருந்த ரூ. 1,500 பணம் திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மருவத்தூா் போலீஸாா், கைரேகைப் பிரிவு, மோப்ப நாய் படை பிரிவினருடன் சம்பவ இடத்துக்குச் சென்று தடயங்களை பதிவுசெய்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.