`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
வீர தீர சூரன் பாகம் 2 விமர்சனம்: அசரடிக்கும் முதல் பாதி, மிரட்டலான மேக்கிங்; வாகை சூடுகிறானா காளி?
மதுரையில் செல்வாக்குமிக்க குடும்பத்தின் தலைவராக இருக்கும் பெரியவர் ரவிக்கும் (பிருத்வி) அவரது மகன் கண்ணனுக்கும் (சூரஜ் வெஞ்சரமூடு) ஊர்த் திருவிழாவின்போது ஒரு சிக்கல் எட்டிப் பார்க்கிறது. அதே சிக்கலைச் சாக்காக வைத்து அவர்களை என்கவுன்ட்டரில் போடத் துடிக்கிறார் எஸ்.பி-யான அருணகிரி (எஸ்.ஜே. சூர்யா). அருணகிரியிடமிருந்து தப்பிக்க அந்த ஊரில் மளிகைக் கடை வைத்திருக்கும் காளியின் (விக்ரம்) உதவியை நாடுகிறார் பெரியவர் ரவி. காளி, அருணகிரி, பெரியவர், கண்ணன் இவர்களுக்குள் இருக்கும் முன்பகை எத்தகையது, அருணகிரி எதற்காகப் பெரியவர் குடும்பத்தைப் பழிவாங்கத் துடிக்கிறார், ரவுடிகளே மிரளும் காளியின் பிளாஷ்பேக் என்ன, அவர் இந்தச் சிக்கலுக்கு எழுதும் முடிவுரை என்ன என்பதே இந்த 'வீர தீர சூரன் பாகம் 2'.
குடும்பஸ்தனாகக் காதல் மனைவியுடன் சேட்டை, குடும்பத்தைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்வதில் பதற்றம், எல்லாம் முடிந்துவிட்டது என்ற இடத்திலும் பயத்தைத் துளிகூட காட்டாத நெஞ்சுரம் எனப் பட்டையைக் கிளப்பி கமர்ஷியல் ரூட்டில் சிக்ஸர் அடித்திருக்கிறார் ‘சீயான்’ விக்ரம். குறிப்பாக, வசனங்களாகச் செல்லும் காட்சிகளில் அவர் போடும் ‘டேய்’ கூட அப்லாஸ் அள்ளுகிறது. காதல் கெமிஸ்ட்ரியில் ஹார்ட் வாங்கும் துஷாரா, "என்ன நடக்கிறது" என்று தெரியாமல் போராடும் இடத்தில் பலவித உணர்வுகளை அற்புதமாகக் கடத்தி, நடிப்பில் சபாஷ் வாங்குகிறார். சூது, வன்மம், சூழ்ச்சி என ராட்டினம் போலச் சுழலும் கதாபாத்திரத்தை, தன் நடிப்பு எனும் அச்சாணியைக் கொண்டு நிலை நிறுத்தி மிரட்டியிருக்கிறார் எஸ்.ஜே. சூர்யா.
மகனைக் காப்பாற்ற எந்த எல்லைக்கும் செல்லும் பிருத்வி, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடும் சூரஜ் வெஞ்சரமூடு என இருவரும் வில்லனிசத்தில் போட்டிப் போட்டுக்கொண்டு ஸ்கோர் செய்திருக்கிறார்கள். இவர்களின் குடும்பப் பெண்களாக வரும் கதாபாத்திரங்களும் கோபத்தைத் தூண்டும் அளவில் படு ரியலான நடிப்பைக் கொடுத்து பாஸ் ஆகிறார்கள். பாலாஜி எஸ்.யூவின் குணச்சித்திர நடிப்பும் படத்துக்கு வலு சேர்க்கிறது.
நிசப்தமான சூழலில் கேட்கும் கடிகார முள்ளின் ஒலியைப் போல, ‘திக் திக்’ திரில் உணர்வை தன் பின்னணி இசையில் கடத்தி, கதையோடு சேர்ந்து பயணிக்க வைத்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ் குமார். அதிலும் அந்த மாஸ் பி.ஜி.எம்., படம் முடிந்த பின்னரும் மனதில் நிற்கும் அளவுக்கான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பாடல்கள், திரைக்கதையின் போக்கைத் தொந்தரவு செய்யாமல் கடந்து போகின்றன. இரவு நேரத்தில் நடக்கும் கதைக்கு பக்காவான லைட்டிங், உணர்வுகளைத் துண்டிக்காத சிங்கிள் ஷாட் காட்சிகள் என நேர்த்தியான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர். அதிலும் திருவிழாக் காட்சிகளில் கலை இயக்குநர் சி.எஸ். பாலசந்தரின் உழைப்பைப் பிரமாண்டமாகத் திரையில் கொண்டு வந்திருப்பது சிறப்பு.
திரைக்கதையின் 'பக் பக்' துடிப்பை முதல் பாதியில் அற்புதமாகக் கடத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே. ஆனால், இரண்டாம் பாதியின் பிளாஷ்பேக் பகுதியில் சற்றே கறாராகக் கத்திரி போட்டிருக்கலாம். ‘பீனிக்ஸ்’ பிரபுவின் துப்பாக்கிகள் தெறிக்கும் சண்டைக் காட்சியின் வடிவமைப்பு, படத்தின் முக்கிய ப்ளஸ்ஸாக அமைகிறது. அதிலும், துப்பாக்கிச் சூட்டில் தொடங்கி, கார் வெடித்துச் சிதறும் இடம் வரை தொடரும் காட்சி, சிறப்பான திரையாக்கத்துக்கு உதாரணம்; படக்குழுவின் உழைப்புக்குப் பாராட்டுகள்.
ஒரே இரவில் இத்தனை மனிதர்கள், இத்தனை நிகழ்வுகள், இத்தனை பின்கதைகள் எனக் கதை சொல்லும் யுக்தியிலேயே புதுமையைக் கொடுத்துக் கவர்கிறார் இயக்குநர் எஸ்.யூ. அருண்குமார். மனித மனங்களுக்குள் மண்டிக் கிடக்கும் வன்மத்தைப் பட்டாசாக மாற்றி, அதற்கு நீண்ட திரியை வைத்துக் கொளுத்திவிட்டது போல, 'எப்போது வெடிக்கும், எப்போது வெடிக்கும்' என்று எழுதப்பட்ட திரைக்கதை, இருக்கை நுனியில் கட்டிப்போடுகிறது. ஒருவித பதற்றமான சூழலிலேயே வைத்திருக்கும் திரையாக்கம், எந்த இடத்திலும் நம்மைக் கதை மாந்தர்களைவிட்டு விலகாத வண்ணம் பார்த்துக்கொள்கிறது. அதேபோல, நாயகனின் பாசத்தைப் பாடல் காட்சிகளின் மாண்டேஜிலேயே சொன்ன விதமும் ஹைக்கூ டச்! போலீஸ் என்கவுன்ட்டர், கஸ்டடி மரணம் ஆகிய முக்கிய பிரச்னைகளை சற்றே தொட்டிருந்தாலும், அதை இன்னும் ஆழமாகப் பேசியிருக்கலாம்.
முன்கதையில் எஸ்.ஜே. சூர்யாவும் விக்ரமும் ஒரே அறைக்குள் பேசிக்கொள்ளும் இடம், போலீஸ் ஸ்டேஷன் கொலை என இரண்டாம் பாதியின் மாஸ் காட்சிகள் மண்டையில் ஒட்டிக்கொண்டாலும், அதன் நீளம் முதல் பாதியின் வேகத்துக்கு ஈடு கொடுக்கவில்லை. பழி வாங்கும் படலத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் டீல் பேசிக்கொள்ளும் போக்கு, ஆரம்பத்தில் திரைக்கதையின் வேகத்தை அதிகரிக்க உதவினாலும், இறுதியில் சற்றே அயர்ச்சியைத் தருகிறது. அதேபோல, இறுதிக் காட்சியில் அத்தனை கொடூரமான சம்பவங்கள் நடந்துகொண்டிருக்க, போலீஸ் காட்சிக்குள் வந்தும் பின்னர் காணாமல் போவது ஏன் என்பது புரியவில்லை.
இரண்டாம் பாதியின் திரைக்கதை சற்றே டல் அடித்தாலும், நடிகர்களின் தேர்ந்த நடிப்பு, சிறப்பான திரையாக்கம், முதல் பாதியின் விறுவிறுப்பான திரைக்கதை ஆகியவற்றால் ‘வீர தீர சூரன் பாகம் 2’ நம் மனத்தினில் வெற்றி வாகை சூடுகிறான்.