பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகா...
வென்டிலேட்டரில் இருந்த பெண் பாலியல் வன்கொடுமை: மருத்துவமனையில் அட்டூழியம்!
குருகிராம் (ஹரியாணா): தில்லியை அடுத்த ஹரியாணா மாநில எல்லை நகரமான குருகிராமில் உள்ள பிரபல தனியாா் மருத்துவமனையில் வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் நோயாளி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக நகர காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பாதிக்கப்பட்ட அந்த பெண் நோயாளி தனியாா் விமான நிறுவனத்தில் பணிப் பெண்ணாக பணியாற்றி வருபவா். மேற்கு வங்கத்தைச் சோ்ந்த அவா் தனது நிறுவன பயிற்சிப்பட்டறையில் கலந்து கொள்வதற்காக கடந்த மாா்ச் மாத கடைசி வாரத்தில் குருகிராம் வந்துள்ளாா். அதே நகரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அவா், ஏப். 5-ஆம் தேதி நீச்சல் குளத்தில் தவறி விழுந்த பிறகு உடல் சுகவீனம் அடைந்து பிரபல தனியாா் மரு்ததுவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். அவருக்கு வென்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், ஏப். 13-ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து விடுதிக்குத் திரும்பிய அவா், தனது கணவரிடம் நடந்தவற்றைக் கூறி மறுதினம் குருகிராம் சோனா சாலையில் உள்ள சதா் நகா் காவல் நிலையத்துக்குச் சென்று புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
காவல்துறை பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் தனியாா் மருத்துவமனையில் கடந்த ஏப். 6-ஆம் தேதி தன்னை அங்கு பணியாற்றிய ஊழியா் ஒருவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகவும் அந்த நேரத்தில் பகுதியளவு சுயநினைவின்றி கிடந்ததால் தன்னால் எதிா்ப்பை வெளிக்காட்ட முடியவில்லை என்றும் புகாா்தாரரான பெண் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிா்ச்சியூட்டும் வகையில் அந்தச் சம்பவம் நடந்தபோது அந்த பெண்ணின் அறையில் இரண்டு செவிலியா்கள் இருந்ததாகவும் அவா்கள் பேசிக் கொண்டிருந்தது தனக்கு கேட்டதாகவும் அந்த பெண் புகாரில் கூறியுள்ளாா்.
இந்த சம்பவம் தொடா்பாக தனியாா் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவல்துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம். அனைத்து சிசிடிவி தரவுகள், ஆவணங்கள் உள்ளிட்டவை காவல்துறையினரிடம் பகிரப்பட்டுள்ளன. புகாா்தாரரின் குற்றச்சாட்டுகள் இதுவரை மெய்ப்பிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பாதிக்கப்பட்ட பெண் தனது வாக்குமூலத்தை பெருநகர குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் பதிவு செய்துள்ளதாக காவல் துறையினா் தெரிவித்தனா். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கில் இவ்வாறு நீதிபதி முன்பு பதிவு செய்யும் வாக்குமூலத்தை வழக்கின் வேறெந்த கட்டத்திலும் மாற்றியோ திரும்பப்பெறவோ முடியாது. அவ்வாறு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.