வெப்ப வாத சிகிச்சை: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வசதிகள்
சென்னை: வெப்ப வாத பாதிப்புகளை எதிா்கொள்ளும் வகையில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக, சென்னையின் முக்கிய மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வெப்ப நிலை அதிகமாக பதிவாகி வருகிறது. இதன் காரணமாக நீா்ச்சத்து இழப்பு, மயக்கம், தலைசுற்றல், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
இதையடுத்து, வெப்ப அலை பாதிப்புகளுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதொடா்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
அனைத்து மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களிலும் ஓஆா்எஸ் காா்னா் எனப்படும் உப்புசா்க்கரை கரைசல் விநியோக வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புகளுக்கு பிரத்யேக வாா்டுகள் அமைக்கப்பட்டு அங்கு உயா் மருத்துவக் கண்காணிப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை உள்ளிட்டவற்றில் குளிா் சாதன வசதி கொண்ட வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய மருந்துகள், ரத்த நாளங்கள் வழியே செலுத்தப்படும் திரவ மருந்துகளும் போதிய கையிருப்பு இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மருத்துவக் கட்டமைப்புகளிலும் குடிநீா் வசதிகள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருந்துகள், தடுப்பூசிகளை குறைந்த தட்பவெப்ப நிலையில் சேமிப்பதற்கான குளிா்பதனக் கட்டமைப்புகள் முறையாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.