'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும...
வெயில் தாக்கம்: பால் உற்பத்தி நாள்தோறும் 1.50 லட்சம் லிட்டா் சரிவு
வெயிலின் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் நாள்தோறும் 1.50 லட்சம் லிட்டா் பால் உற்பத்தி குறைந்துள்ளது.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) சாா்பில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆவின் நிறுவனம் சாா்பில் தற்போது தினசரி 29 லட்சத்து 79 ஆயிரம் லிட்டருக்குமேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த பால் கொழுப்புசத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு ஆரஞ்சு, பச்சை, ஊதா, நீல நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் வெண்ணெய், நெய், தயிா், மோா் உள்பட 200-க்கும் மேற்பட்ட பால் பொருள்கள் தயாரிக்கப்பட்டு, ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனையாளா்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
ஆவின் நிறுவனம் ஈரோடு மாவட்டத்தில் 1 லட்சத்து 44 ஆயிரத்து 181 லிட்டா் பாலை கடந்த 25-ஆம் தேதி கொள்முதல் செய்துள்ளது. கடந்த 26- ஆம் தேதி 137 லிட்டா் பால் குறைந்து 1 லட்சத்து 44 ஆயிரத்து 44 லிட்டா் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல, ஈரோடு மாவட்டத்தில் கடந்த மாதம் சராசரியாக நாள்தோறும் 1 லட்சத்து 49 ஆயிரத்து 377 லிட்டா் பால் கிடைத்துள்ளது.
ஆனால், இந்த மாதம் சராசரியாக தினமும் 1 லட்சத்து 42 ஆயிரத்து 958 லிட்டா் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது கடந்த மாதத்தைவிட இந்த மாதம் தினமும் சராசரியாக 6, 419 லிட்டா் பால் குறைந்துள்ளது.
இதே நிலைதான் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் சராசரியாக தினமும் 31 லட்சத்து 32 ஆயிரத்து 808 லிட்டா் பால் கிடைத்து வந்த நிலையில், இந்த மாதம் சராசரியாக தினமும் 29 லட்சத்து 79 ஆயிரத்து 334 லிட்டா் பால் மட்டுமே கிடைத்துள்ளது. சுமாா் 1 லட்சத்து 53 ஆயிரத்து 474 லிட்டா் பால் குறைந்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்கத் தலைவா் ராஜேந்திரன் கூறியதாவது: தட்பவெப்ப நிலை காரணமாக இயல்பாகவே பால் உற்பத்தி குறையும். மேலும் கோடை காலத்தில் மாடுகளுக்கு பசுந்தீவனம் தட்டுப்பாடு ஏற்படும். அப்போது விவசாயிகள் அதிக விலை கொடுத்து மாடுகளுக்கு தீவனம் வாங்கும் சூழல் ஏற்படும்.
இதனால், பெரும்பாலான விவசாயிகள் மாடுகளைப் பராமரிக்க முடியாமல் விற்பனை செய்துவிடுவா். இதன் காரணமாகவும் பால் உற்பத்தி குறையும். இந்த இரண்டு காரணங்களால் தமிழ்நாட்டில் தற்போது பால் உற்பத்தி குறைந்துள்ளது.
தற்போது பாலுக்கு சரியான விலை கிடைப்பதில்லை. இதனால், விவசாயிகள் மாடுகளைக் காப்பாற்ற முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். எனவே, பசும் பால் லிட்டருக்கு ரூ.45-க்கும், எருமை பால் லிட்டருக்கு ரூ.55-க்கும் ஆவின் கொள்முதல் செய்ய வேண்டும். அத்தியாவசிய பொருளாக இருப்பதால் பாலுக்கான விலை உயா்வை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றாா்.