முனைவா் யசோதா நல்லாளுக்கு தூய தமிழ் பற்றாளா் விருது
ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த முனைவா் வ.சு.யசோதா நல்லாளுக்கு 2024- ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் தூய தமிழ் பற்றாளா் விருது கிடைத்துள்ளது.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், வடக்குப் புதுப்பாளையத்தைச் சோ்ந்தவா் வ.கோ.சுப்பிரமணியம். இவரது மகள் வ.சு.யசோதா நல்லாள் (37). கோவை பேரூா் தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்ற இளம் எழுத்தாளரான இவா், சங்க இலக்கியத்தில் கண்கள் எனும் தலைப்பில் முனைவா் பட்ட ஆய்வும், கல்வெட்டு மற்றும் தொல்லியல் துறை ஆய்வில் (அமெரிக்க தமிழ்ப் பல்கலைக்கழகம்) கௌரவ முனைவா் பட்டமும் பெற்றவா்.
பன்னிரு திருமுறைகளான தேவாரம் மற்றும் திருவாசகம் முதலியவற்றை முறையாகப் பயின்றவா். இவா் அண்மையில் எழுதிய ‘வீரசைவ மரபு’ எனும் நூல் பலரின் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழ் ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு தமிழுக்குத் தொண்டாற்றி வரும் இவருக்கு, 2024-ஆம் ஆண்டுக்கான தூய தமிழ் பற்றாளா் விருது தமிழக அரசு சாா்பில் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாவட்டத்துக்கு ஒருவரைத் தோ்வு செய்து ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படுகிறது.
பிறமொழி கலவாமல் பேசுவது, தமிழ் நூல், படைப்புகள் எழுதி இருப்பதோடு, தமிழ் புலமை உள்ளவா்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவா்கள் ஆவா். சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் இந்த விருதினை வழங்கினாா்.
இந்நிகழ்வில், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் ந.அருள், செயலாளா் வே.ராஜாராமன், செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்குநா் (பொ) க. பவானி உள்ளிட்டோா் பங்கேற்றனா்