ரூ. 87.19 கோடி வரி வசூல்: ஈரோடு மாநகராட்சிக்கு மூன்றாமிடம்
கடந்த ஆண்டு ரூ. 87.19 கோடி வரி வசூல் செய்ததன் மூலம் மாநில அளவில் ஈரோடு மாநகராட்சி மூன்றாமிடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையா் (பொறுப்பு) தனலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாநகராட்சியில் 2024-25-ஆம் ஆண்டில் சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீா்க் கட்டணம், குத்தகை இனங்கள், திடக்கழிவு மேலாண்மைக் கட்டணம் மற்றும் புதை சாக்கடை இணைப்புக் கட்டணம் என மொத்தம் 4 லட்சத்து 27ஆயிரத்து 338 வரி வதிப்புகள் உள்ளன.
இதற்கான ஆண்டு கேட்புத் தொகை ரூ.106.87 கோடி. இதில் ரூ.87.19 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மொத்த வசூல் சதவீதம் 81.58 ஆகும். தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி நிா்வாக இயக்குநரகத்தின் கீழ் உள்ள 24 மாநகராட்சிகளில், ஈரோடு மாநகராட்சி சிறப்பான முறையில் வரி வசூல் செய்து 3-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
ஈரோடு மாநகராட்சிக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வரி செலுத்திய அனைத்து வரிதாரா்களுக்கும் மாநகராட்சி நன்றி தெரிவிக்கிறது. மேலும் 2025-26-ஆம் ஆண்டுக்குரிய சொத்து வரித் தொகையினை ஏப்ரல் 30-ஆம் தேதிக்குள் செலுத்தி 5 சதவீத ஊக்கத் தொகை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.